×

திண்டுக்கல் அருகே 2 உலோகச் சிலைகள் மீட்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே, குப்பையில் கிடந்த 2 உலோக சாமி சிலைகளை தூய்மைப் பணியாளர்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். திண்டுக்கல் அருகே, பழைய கரூர் ரோட்டில் உள்ள என்.எஸ்.நகர் பஸ்நிறுத்தம் அருகே, தூய்மைப் பணியாளர்கள் நேற்று மாலை குப்பையை தரம் பிரித்துக் கொண்டிருந்தனர். அப்போது குப்பையில் கிடந்த ஒரு பையில் 2 உலோக சாமி சிலைகள் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து 2 உலோகச் சிலைகளையும் கைப்பற்றி தூய்மைப் பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

குப்பையில் கிடந்த சிலைகள் மீனாட்சியம்மன், மதுரை வீரன் என தெரிய வந்தது. சிலைகள் தலா 2 கிலோ எடையுடன் ஒரு அடி உயரத்தில் இருந்தது. சிலைகளை திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்று வைப்பறையில் வைத்துள்ளனர். இது குறித்து பழநி தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து ஆய்வு செய்த பின்னர் சிலைகளின் காலம் குறித்து தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும், சிலைகளை திருடி வந்து குப்பையில் போட்டார்களா என அப்பகுதி சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

The post திண்டுக்கல் அருகே 2 உலோகச் சிலைகள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Old Karur Road ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் பூதிபுரம் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு