×

மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறார்: நரேந்திர மோடி மீது ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறார் என்று மோடி மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து பாஜ, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியை விமர்சித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பதவி விலகப்போகும் பிரதமர் மோடி, இப்போது காபந்து பிரதமர் ஆகிவிட்டார். காபந்து பிரதமர், 1962ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் ஒரே கட்சி 3வது தடவையாக ஆட்சி அமைப்பதாக மார் தட்டுகிறார். அவர் வரலாற்றை மாற்றி எழுத பார்க்கிறார்.

ஜவகர்லால் நேரு 1952ம் ஆண்டு 364 தொகுதிகளிலும், 1957ம் ஆண்டு தேர்தலில் 371 தொகுதிகளிலும், 1962ம் ஆண்டு தேர்தலில் 361 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். ஆனால் மோடி 2024ம் ஆண்டில் வெறும் 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இது அவருக்கு எதிரான பெரிய தீர்ப்பு. மக்கள் தீர்ப்பை நாசமாக்குவதை நோக்கமாக கொண்டு அவர் செயல்பட்டு வருகிறார். கடந்த 1989ம் ஆண்டு தேர்தல் முடிவில், காங்கிரஸ் 197 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜிவ்காந்தி நினைத்திருந்தால், ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கலாம்.

ஆனால், அவர் கண்ணியமும், தார்மீகமும் கருதி, அதை செய்யவில்லை. காபந்து பிரதமருக்கு கண்ணியமும், தார்மீகமும் இருக்கும் என்று யாராவது சொல்ல முடியுமா? அவரை மக்கள் மொத்தமாக நிராகரித்தும் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறார். ஐக்கிய ஜனதாதளம், பீகாருக்கு சிறப்பு நிதிதொகுப்பு வேண்டும் என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதிப்பதாக அறிகிறோம். சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான முந்தைய நிலைப்பாட்டில் மோடி உறுதியாக இருப்பாரா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறார்: நரேந்திர மோடி மீது ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Jairam Ramesh ,Narendra Modi ,New Delhi ,Congress ,Modi ,Lok Sabha elections ,BJP ,General Secretary ,Jairam ,
× RELATED நீட் தேர்வு குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்