×

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி சுற்றுச்சுவர்களை சீரமைத்து வர்ணம் பூசும் பணி தீவிரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பொள்ளாச்சி,ஆனைமலை,வால்பாறை, கிணத்துக்கடவு,சுல்தான்பேட்டை, மதுக்கரை உள்ளிட்ட தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, நகராட்சி பள்ளி,சுயநிதி பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த ஏப்ரல் 23ம் தேதியுடன் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழுவாண்டு தேர்வுகள் நிறைவடைந்தது. இதைதொடர்ந்து மாணவ,மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையில், ஒருமாத கோடை விடுமுறைக்கு பிறகு, வரும் 10ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்க உள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக, அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரம் மட்டுமின்றி, வகுப்பறைகளை சீர்படுத்தி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, அரசு பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளை சீர்படுத்தியும், வண்ணம் தீட்டியும் புதுப்பொலிவாக்கும் பணியில் அந்தந்த பள்ளி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதில், இன்னும் சில பள்ளிகளில் அப்பணி மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும், பல பள்ளிகளில் அந்தந்த பள்ளி நிர்வாகத்தினரின் ஏற்பாட்டின்படி ஆர்வமுடன், வர்ணம் பூசியும், சுகாதாரம் மேம்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பள்ளியாக, மண்ணூர் கோடங்கிபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியானது, தற்போது பல்வேறு வண்ண,வண்ண ஓவியங்களால் ஜொலிக்கிறது. ஒவ்வொரு பிரிவு வகுப்புகளுக்கும் வெவ்வேறு வண்ணங்கள் தீட்டி, பள்ளியை காண்போர் வியக்கும் வண்ணம் பொலிவு படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பள்ளி மாணவர்களை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் வகையிலும் பள்ளி சுற்றிசுவர் மற்றும் வகுப்பறையின் வெளிப்பகுதி சுவர்களில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் ஓவியங்கள் வரையப்பட்டிருப்பது கண்போரை ரசிக்கும் வைக்கும் வகையில் உள்ளது. இதே போல பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலை பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் பள்ளி வளாகங்களிலும், வகுப்பறையிலும் பல்வேறு வண்ணம் தீட்டி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்திஉள்ளனர். இதில், அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மாணவன் மணிகண்டன் என்பவர் சுற்றுச்சுவர் முழுவதும் தாவரங்கள், விலங்குகள்,இயற்கை காட்சிகள் என பல்வேறு ஓவியங்களை வரைந்து அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார். பள்ளியை அழகுப்படுத்தும் பொறுப்பு கல்வித்துறைக்கு மட்டுமின்றி, அதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பும் உள்ளது என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர்.

இதுகுறித்து கல்வி மாவட்ட அலுவலர்கள் கூறுகையில், ‘தமிழக அரசு, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளையும் மேம்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறது. இதில் அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி, மாணவர்களின் பங்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட சில அரசு பள்ளிகளில், அந்தந்த பள்ளி ஆசிரியர்கள்,பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்களிப்புடன் புரனமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதிலும் சில பள்ளிகளில், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தூய்மைப்படுத்தி, வகுப்பறைகளுக்கு வர்ணம் பூசப்படுகிறது.மேலும் பல்வேறு பள்ளிகள் புனரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு, பிற பள்ளிகளுக்கு முன்மாதியான பள்ளியாக விளங்குகிறது.

இதுபோன்று ஒவ்வொரு பள்ளியும் செயல்படும் போது, மாணவர்களின் பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.வருங்காலங்களில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் செயல்படுவதுடன், மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்றனர்.

The post பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி சுற்றுச்சுவர்களை சீரமைத்து வர்ணம் பூசும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Pollachi Education District ,Pollachi ,Assisted ,Taluka ,Anaimalai ,Valpara ,Dunatukadavu ,Sultanpet ,Madukkara ,Pollachi Education ,District ,Dinakaran ,
× RELATED கேரளாவிலிருந்து பொள்ளாச்சி...