×

நீட் வினாத்தாள் கசிந்த ராஜஸ்தானில் 11 பேர் முதலிடம்.. அடுத்தடுத்த வரிசை எண் உடைய 6 மாணவர்கள் 720 மதிப்பெண் எடுத்தது எப்படி? : தொடரும் குளறுபடிகள்!!

டெல்லி : நீட் தேர்வு எழுதியவர்களில் சில மாணவர்களுக்கு முரண்பட்ட மதிப்பெண்கள் வழங்கப்பட்டதால் மாணவர்கள் மத்தியில் சர்ச்சை எழுந்துள்ளது. நாடு முழுவதும் ஜூன் 4-ம் தேதி நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. அதன்படி, நீட் தேர்வில் 67 பேர் நாடு முழுவதும் முதலிடம் பெற்றிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேலும் நீட் முடிவு ஜூன் 15-ல் வெளியாகும் என அறிவித்த நிலையில் மக்களவை தேர்தல் முடிவு வெளியான நாளில் அறிவித்ததால் இவ்விவகாரம் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. நாடு முழுவதும் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 பேரில் 8 பேர் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் ராஜஸ்தானில் இருந்து மட்டும் 11 பேர் நிகழாண்டில் நீட் தேர்வில் முதலிடம் பெற்று இருப்பது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டை என்.டி.ஏ. மறுத்திருந்தாலும், 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் வினாத்தாள் கசிந்த ராஜஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 11 பேர் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் நீட் தேர்வில் 720 மதிப்பெண்கள் பெற்று 67 பேர் முதலிடம் பெற்ற நிலையில் சிலர் 719, 718 மதிப்பெண் பெற்றுள்ளதால் குழப்பம் நீடிக்கிறது.

ஒரு கேள்விக்கு தவறாக விடையளித்தால் நெகட்டிவ் மதிப்பெண் உட்பட 5 மதிப்பெண் கழித்து 715 மதிப்பெண்கள்தான் கிடைக்கும். ஆனால் இரண்டாம் இடத்தில் உள்ள மாணவர்கள் 715 மதிப்பெண்களுக்கு பதில் 719, 718 என பெற்றுள்ளதால் சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே அடுத்தடுத்த வரிசை எண்கள் உடைய 6 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் எடுத்துள்ளது எப்படி என மாணவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.தேர்வு முடிவுகளை ஆராய்ந்ததில் 2307010 என்ற வரிசையில் தொடங்கும் பதிவு எண்களை கொண்ட 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அடுத்தடுத்த வரிசை எண்கள் உடைய ராஜஸ்தான், அரியானா, டெல்லியை சேர்ந்த 6 பேர் நீட் தேர்வில் 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளது அம்பலம் ஆகி உள்ளது. இவ்வாறு நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சையான நிலையில், மதிப்பெண் குளறுபடிகளை சரி செய்த பிறகே மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கருணை அடிப்படையில் மதிப்பெண் முதலிடம்

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் பெற்றவர்களில் 44 பேர் முதலிடம் பிடித்தனர். இயற்பியல் பாட கேள்வி பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டதாக மாணவர்கள் புகார் அளித்ததை அடுத்து, சர்ச்சைக்குரிய கேள்விக்கு எந்த பதில் அளித்திருந்தாலும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண் வழங்கியதால் 44 மாணவர்கள் பெற்றிருந்த 715 மதிப்பெண்கள் 720 ஆக உயர்ந்துள்ளது.

தேர்வு முகமை விளக்கத்தை ஏற்க மாணவர்கள் மறுப்பு

சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளித்ததாக தேசிய தேர்வு முகமை கூறும் விளக்கத்தை மாணவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். எதிர்பாராத விதமாக நேரம் விரயமானால் கருணை மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என தேசிய தேர்வு முகமை கூறிய விளக்கத்தை ஏற்க மாணவர்கள் மறுத்துவிட்டனர்.

The post நீட் வினாத்தாள் கசிந்த ராஜஸ்தானில் 11 பேர் முதலிடம்.. அடுத்தடுத்த வரிசை எண் உடைய 6 மாணவர்கள் 720 மதிப்பெண் எடுத்தது எப்படி? : தொடரும் குளறுபடிகள்!! appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Delhi ,NATIONAL SELECTION AGENCY ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு; கவுன்சிலிங்...