×

தொடர் தோல்வி.. வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட வேண்டும்: அதிமுகவினர் ஒன்றிணைய ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

சென்னை: அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று சசிகலா நேற்று அழைப்பு விடுத்த நிலையில் இன்று ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக அழிவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது என்று சசிகலா நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். பழனிசாமி தலைமையிலான அதிமுக வேட்பாளர்களும் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட பன்னீர்செல்வமும் தோல்வியை தழுவினர்.

மக்களவை தேர்தலில் பழனிசாமி தலைமையில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில் ஓ.பன்னர்செல்வம் அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்; “ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம்.” இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும்.

“தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே” என்னும் கழக நிறுவனர், புரட்சித் தலைவர், மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க தியாகத்திற்கும் ஆயத்தமாவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

The post தொடர் தோல்வி.. வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட வேண்டும்: அதிமுகவினர் ஒன்றிணைய ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Paneer Selvam ,Chennai ,Sasikala ,B. S. ,Dinakaran ,
× RELATED பதினோறாவது தொடர் தோல்வியை வரவு...