×

ஆன்லைனில் பணத்தை இழந்த 7 பேரின் ₹1.78 லட்சம் மீட்பு உரியவர்களிடம் எஸ்பி ஒப்படைத்தார்

வேலூர், ஜூன் 6: வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 பேர் ஆன்லைன் மூலம் இழந்த ₹1 லட்சத்து 77 ஆயிரத்து 895 ரொக்கப்பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். இதனை உரியவர்களிடம் எஸ்பி நேற்று ஒப்படைத்தார். வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் அப்துல்மஜீத். வியாபாரியான இவருக்கு தனியார் கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தொடர்பு கொண்டவர்கள் ₹5 ரீசார்ஜ் செய்ய லிங்க் ஒன்றை அனுப்பி, அப்துல்மஜீத்தின் வங்கி விவரங்களை பெற்று அவரது கணக்கில் இருந்து ₹14 ஆயிரத்தை எடுத்துள்ளனர். அதேபோல் பாகாயத்தை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவர் பிரபல தனியார் ஆன்லைன் மார்க்கெட்டில் ஆடைகளை வாங்கியுள்ளார். அதன்படி வந்த ஆடைகள் சரியில்லாததால், சம்பந்தப்பட்ட ஆன்லைன் மார்க்கெட்டிங் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்ட போது அவர்கள் கேட்ட வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்துள்ளார். அதன் மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து ₹10 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் குடியாத்தத்தை சேர்ந்த கிரண் நாகேந்திரா என்பவருக்கு மொபைகிவிக் வாலட்டில் இருந்து அவருக்கே தெரியாமல் அவரது வங்கி கணக்கில் இருந்து ₹11 ஆயிரத்து 895 பணம் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேலூரை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் தனது செல்போனை தொலைத்துள்ளார். அதை எடுத்தவர்கள் அவரது செல்போனில் ‘ஜி பே’வை பயன்படுத்தி ₹1 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். இதுதவிர காட்பாடியை சேர்ந்த தங்கமணி என்பவரிடம் வங்கி மேலாளர் பேசுவதாக கூறி அவரது வங்கி விவரங்களை பெற்று ₹19 ஆயிரத்து 899ஐ பணத்தை மோசடி செய்துள்ளனர். கணியம்பாடியை சேர்ந்த ராணுவ வீரர் பாவேந்தன் என்பவர் ஓஎல்எக்ஸ் கார் விற்பனைக்கு வந்த விளம்பரத்தை பார்த்து கார் வாங்க முன்பணமாக ₹5 ஆயிரத்தை கட்டி இழந்துள்ளார். இதுதொடர்பான புகார்கைள பெற்ற மாவட்ட சைபர் கிரைம் போலீசார், பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணம் ₹1 லட்சத்து 77 ஆயிரத்து 895ஐ மீட்டனர். தொடர்ந்து எஸ்பி மணிவண்ணன் நேற்று உரியவர்களிடம் பணத்தை ஒப்படைத்தார். அப்போது ஏடிஎஸ்பி கோட்டீஸ்வரன், இன்ஸ்பெக்டர் புனிதா, தொழில்நுட்ப பிரிவு எஸ்ஐ யுவராணி, ஏட்டு மணிமேகலை, ரேணுகோபால் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post ஆன்லைனில் பணத்தை இழந்த 7 பேரின் ₹1.78 லட்சம் மீட்பு உரியவர்களிடம் எஸ்பி ஒப்படைத்தார் appeared first on Dinakaran.

Tags : SP ,Vellore ,Vellore district ,Vellore Sattuvachari ,Dinakaran ,
× RELATED வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நகைக் கடையில் கொள்ளை முயற்சி..!!