×

தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக 8 தொகுதிகளில் டெபாசிட் இழந்து பரிதாபம்: கூட்டணி கட்சியான தேமுதிக 2 இடங்களில் டெபாசிட் காலி

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வாரி சுருட்டிய நிலையில், அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. 8 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக 2 இடங்களில் டெபாசிட்டை இழந்து மண்ைண கவ்வியது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். தமிழகத்தில் திமுக போட்டியிட்ட 21 தொகுதி, காங்கிரஸ் 9, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் 2 தொகுதி, விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதி, மதிமுக 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 ஆகிய 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

அதேபோன்று புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிட்ட ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த இடத்தில் அதாவது 2வது இடத்திற்கு அதிமுக, பாஜ வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவியது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பின்தங்கி, பாஜ கூட்டணியில் போட்டியிட்ட பல தலைவர்கள் 2வது இடத்துக்கு வந்துள்ளனர். சில இடங்களில் அதிமுக 3வது இடத்துக்கும் தள்ளப்பட்டது. அதிமுக மட்டும் 32 இடங்களில் தனித்து போட்டியிட்டது. தேமுதிகவுக்கு 5 இடங்களும், புதிய தமிழகம் 1, எஸ்டிபிஐ 1 என 7 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது. இதில் அதிமுக போட்டியிட்ட 32 இடங்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இதில் அதிமுக நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் 4வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுக கூட்டணி டெபாசிட் இழந்தது. அதன்படி தென்சென்னை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய 8 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். பிரதான எதிர்க்கட்சியாகவும், தமிழகத்தின் 2வது கட்சியான அதிமுக 8 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோன்று, 9 தொகுதிகளில் 3ம் இடத்தையும், 3 தொகுதிகளில் 4ம் இடத்திற்கும் அதிமுக தள்ளப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்கள் திருவள்ளூர், மத்திய சென்னை, ஆகிய 2 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக 8 தொகுதிகளில் டெபாசிட் இழந்து பரிதாபம்: கூட்டணி கட்சியான தேமுதிக 2 இடங்களில் டெபாசிட் காலி appeared first on Dinakaran.

Tags : Adimuga ,Tamil Nadu ,Demudika ,Chennai ,demuka ,Puducherry ,Adimuka ,Demutika ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மலிவான...