×

நமச்சிவாயம் தோல்வி எதிரொலி: புதுச்சேரி அமைச்சர்கள் பதவியை பறிக்க ரங்கசாமி அதிரடி முடிவு

புதுச்சேரி: புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய வைத்திலிங்கம் மீண்டும் 2வது முறையாக வெற்றிவாகை சூடியுள்ளார். புதுவையில் ஆளுங்கட்சி சார்பில் களமிறங்கும் வேட்பாளரே வெற்றிபெறுவார் என்ற பிம்பத்தை உடைத்தெறிந்து வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ள வைத்திலிங்கம் இத்தேர்தலில் ஆளுங்கட்சி தரப்புக்கு பல்வேறு அதிர்ச்சி வைத்தியமும் அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக புதுவையில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் ஏனாம், இந்திராநகர் தொகுதிகளை தவிர்த்து மற்ற அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜ வேட்பாளர் நமச்சிவாயத்தைவிட அவர் கூடுதலாக வாக்குகள் பெற்றிருப்பது என்ஆர் காங்கிரஸ், பாஜ நிர்வாகிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

முதல்வரின் சொந்த தொகுதியான தட்டாஞ்சாவடியில் கூடுதல் வாக்கை பெற்ற வைத்திலிங்கம், சபாநாயகர் செல்வம் தொகுதி மற்றும் என்ஆர் காங்கிரஸ் அமைச்சர்களின் தொகுதிகளான மங்கலம் (தேனீ.ஜெயக்குமார்), ராஜ்பவன் (லட்சுமிநாராயணன்), காரைக்கால் வடக்கு (திருமுருகன்) தொகுதிகளில் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளார். இதேபோல் பாஜ அமைச்சர்களின் தொகுதியான மண்ணாடிப்பட்டு (நமச்சிவாயம்), ஊசுடு (சாய்.சரவணன்குமார்) தொகுதியிலும் அதிக ஓட்டுகளை அள்ளியிருப்பதோடு பாஜ எம்எல்ஏக்களின் தொகுதிகளான நெல்லித்தோப்பு, காமராஜர் நகர், காலாப்பட்டு தொகுதிகளிலும் அக்கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. இதுதவிர புதுச்சேரியின் மற்ற பிராந்தியங்களில் ஏனாமை தவிர காரைக்கால், மாகேயிலும் காங்கிரசின் கை ஓங்கியது ஆளுங்கட்சி தரப்புக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. இதுபோன்ற சூழலால் அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் கலக்கத்தில் உள்ளனர். 1.30 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஆளுங்கட்சி மீதான அதிருப்தியா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இது குறித்து ரங்கசாமியுடன் நெருக்கமாக இருக்கும் என்.ஆர்.காங்கிரசின் மூத்த நிர்வாகி கூறுகையில், கட்சியில் அமைச்சர்கள், சொந்த செல்வாக்கை மட்டும் உயர்த்தி உள்ளனர். மக்களுக்காகவும், கட்சிக்காகவும் செயல்படவில்லை என முதல்வர் ரங்கசாமி ஆதங்கத்துடன் உள்ளார். செயல்படாத அமைச்சர்கள், தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்ற தவறிய எம்எல்ஏக்கள் போன்றவற்றின் தாக்கம் இத்தேர்தலில் எதிரொலித்துள்ளது. இதற்கான முதல் நடவடிக்கையாக புதுச்சேரி அமைச்சரவையில் விரைவில் அதிரடி மாற்றங்கள் இருக்கும். ஒருவரது அமைச்சர் பதவியை பறிக்க ரங்கசாமி முடிவு செய்துள்ளார். மற்றொருவருக்கு இலாகா மாறும். இதுபோன்று பாஜவிலும் அமைச்சர்களின் இலாகாக்களை மாற்ற முடிவு செய்துள்ளார். புதிதாக பொறுப்பேற்று உள்ள திருமுருகனுக்கும் இலாகா வழங்கப்படும். இனிமேலும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சரியாக செயல்படவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்க ரங்கசாமி முடிவு எடுத்துள்ளார் என்றார். விரைவில் மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

 

The post நமச்சிவாயம் தோல்வி எதிரொலி: புதுச்சேரி அமைச்சர்கள் பதவியை பறிக்க ரங்கசாமி அதிரடி முடிவு appeared first on Dinakaran.

Tags : Namachivayam ,Rangasamy ,Puducherry ,Vaithilingam ,Congress ,Puduvai ,
× RELATED புதுச்சேரி அரசு மீது டெல்லியில் பாஜக...