×

கூட்டணி ஆட்சி அமைக்கிறது பாஜக: 8ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி: தே.ஜ. கூட்டணி கூட்டத்தில் முடிவு

புதுடெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜ தயாராகி உள்ளது. இதற்காக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ளது. நாளை மறுதினம் 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் ஆளும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 294 இடங்களையும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், இந்த முறை எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. அதிகபட்சமாக பாஜ 240 தொகுதிகளில் வென்றுள்ளது. இதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளின் தயவுடன் ஒன்றியத்தில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை பாஜ நேற்று மேற்கொண்டது. இதற்காக டெல்லியில் ஆலோசனை நடத்த கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் கடைசி அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டு, 17வது மக்களவையை கலைக்க ஒப்புதல் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, ராஷ்டிரபதி பவன் சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி முர்மு, 17வது மக்களவையை கலைத்து உத்தரவு பிறப்பித்தார். புதிய அரசு பதவியேற்கும் வரை பிரதமராக நீடிக்க மோடியிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். 17வது மக்களவையின் பதவிக்காலம் வரும் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக புதிய அரசு பதவியேற்க வேண்டும். எனவே புதிய அரசு அமைக்க கூட்டணிகளிடம் ஆதரவு திரட்டுவதற்காக, மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று மாலை நடந்தது. இதில், அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தியின் சிராக் பஸ்வான், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மோடியை கூட்டணி தலைவராகவும் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தும் சந்திரபாபு, நிதிஷ் குமார் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் 21 தலைவர்களும் கையெழுத்திட்ட கடிதம் வழங்கினர். ‘‘புதிய அரசு அமைப்பதில் இனியும்நாம் தாமதிக்கக் கூடாது. அதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்’’ என நிதிஷ் குமார் வலியுறுத்தி உள்ளார். இதனால், வரும் 8ம் தேதி பிரதமர் மோடி 3வது முறையாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றாலும், நாளை மறுதினம் பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக மற்ற கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பாஜ தரப்பில் கூறப்பட்டுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக தெரிகிறது. அதே சமயம், ஆட்சி அமைக்க இன்னும் 40 எம்பிக்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் உள்ள இந்தியா கூட்டணியும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

The post கூட்டணி ஆட்சி அமைக்கிறது பாஜக: 8ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி: தே.ஜ. கூட்டணி கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : BJP ,PM Modi ,J. ,NEW DELHI ,BAJA ,Modi ,PM ,Te. J. ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி பதவியேற்பு விழா...