×

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக விமான சேவைகள்பாதிப்பு


சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் சென்னையில் இருந்து புறப்படும் 14 விமானங்களின் புறப்பாடு தாமதமானது. வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. அனல் காற்றினால் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியாதபடி தவித்தனர். பகலில் வெயிலினாலும் இரவில் வெப்பத்தின் தாக்குதலினாலும் மிகவும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் இன்று சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 3 மணி முதல் இடிமின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது.

எழும்பூர், கோயம்பேடு, அண்ணாசாலை, கிண்டி,மந்தைவெளி, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயப்பேட்டை விருகம்பாக்கம், கே.கே.நகர், வடபழனி, ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இடிமின்னலுடன் மழை பெய்தது. மழையினால் கோடை வெப்பம் இன்று தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. வறுத்தெடுத்த வெயிலினால் அவதியடைந்து வந்த பொது மக்கள் மழை பெய்ததை கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்து வரும் மழையால் மோசமான வானிலை நிலவி வருகிறது. அபுதாபி, திருச்சி, டெல்லி, திருவனந்தபுரம், அந்தமானில் இருந்து வந்த 5 விமானங்கள் வானில் வட்டமடித்தன. விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. அபுதாபி சர்வதேச விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திரும்பிச் சென்றது.

4 விமானங்கள் வானில் ஒரு மணி நேரமாக வட்டமடித்த நிலையில், மழை ஓய்ந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின. மழையால் சென்னையில் இருந்து புறப்படும் 14 விமானங்களின் புறப்பாடு தாமதமானது. கொல்கத்தா, புனே, ஹைதராபாத், மும்பை, தோகா, கவுகாத்தி, டெல்லி, ராஜமுந்திரி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 14 விமானங்கள் தாமதமானது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக விமான சேவைகள் 2-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

The post சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக விமான சேவைகள்பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,South West Bay of Bengal ,North Sri Lankan ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...