×

பச்சிளங் குழந்தையின் முதல் இரு வருடங்கள்

நன்றி குங்குமம் டாக்டர்

குழந்தை நல மருத்துவர் எஸ்.பாலசுப்ரமணியன்

வாழ்க்கையின் முதல் 5 ஆண்டுகள் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியின் அடித்தளத்தை அமைக்கின்றன. இந்த 5 ஆண்டுகளில், உடலின் பல்வேறு உறுப்புகள் வளர்ச்சியடைகின்றது மற்றும் குழந்தைகள் பல்வேறு உடல் மற்றும் மனம்சார்ந்த செயல்பாடுகளைச் செய்யத் தொடங்குகின்றனர். ஏறக்குறைய 75% குழந்தைகள் குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட செயல்களைச் செய்யக் கற்றுக்கொள்கிறார்கள். இவை, குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியின் குறிகாட்டிகள் என்பதால் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் அவற்றைக் கண்காணிக்க வேண்டும். இந்த 5 ஆண்டுகளில், குழந்தைகளின் நோயெதிர்ப்பு அமைப்பும் முழுமையான வளர்ச்சிபெறாமல் இருக்கும் என்பதால், கடுமையான தொற்றுநோய்களுக்கு எதிராக அதனால் போராட முடியாது.

வாழ்க்கையின் முதல் வருடத்திற்குப் பிறகு, குழந்தை மற்ற குழந்தைகளுடன் அல்லது பெரியவர்களுடன் அதிகம் பழகத் தொடங்கும் போது, அவர்கள் அதிக தொற்றுநோய்களுக்கு ஆளாகிறார்கள். நிமோனியா, ஹெபடைடிஸ் A மற்றும் தட்டம்மை போன்ற கடுமையான நோய்த்தொற்றுகள் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையைப் பாதிக்கின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

இந்த கடுமையான நோய்த்தொற்றுகள் மற்றும் அவற்றின் மீட்பு காலத்தில், குழந்தைகள் நன்றாக சாப்பிடுவதில்லை. இது அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சியை பாதிக்கும்.
அதனால்தான் இந்த ஆண்டுகளில் அனைத்து தடுப்பூசிகளையும் சரியான வயதில் கொடுப்பது மற்றும் ‘நோய்த்தடுப்பு’ மற்றும் வளர்ச்சி மைல்கற்கள் இரண்டையும் கண்காணிப்பது முக்கியம் ஆகும். முதல் ஆண்டு தடுப்பூசிகள் போடும்போது பெற்றோர்கள் அதைத் தவறாமல் பின்பற்றுவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம், ஆனால் 2வது வருடத்தில் தடுப்பூசி அளவுகள் பற்றி கவலைப்படுவதில்லை, அந்த சமயத்தில் குழந்தைகளுக்கு சில முக்கியமான தடுப்பூசிகளைப் போட வேண்டும்.உங்கள் குழந்தையின் 2வது ஆண்டில் கவனிக்க வேண்டிய வளர்ச்சி மற்றும் நோய்த்தடுப்பு மைல்கற்களின் பட்டியல் இதோ:

வளர்ச்சி மைல்கற்கள்

உடல்: இந்த வயதில் குழந்தைகள் ஓடுவர், ஒரு பந்தை உதைத்து தள்ளுவர் மற்றும் கரண்டியால் எடுத்து சாப்பிடுவர்.மூளை-வளர்ச்சி: இந்த வயதில், அவர்கள் எளிய வடிவங்கள் மற்றும் வண்ணங்களை வரிசைப்படுத்தலாம், எளிமையான விளையாட்டுகளை விளையாடலாம், பாத்திரமேற்றல் விளையாட்டுகளை விளையாடலாம் மற்றும் பிளாக்குகளுடன் விளையாடலாம். அவர்கள் இடது/வலது கை பழக்கத்தைத் தீர்மானிக்கலாம், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பொம்மைகளுடன் விளையாடலாம்.

மொழி மற்றும் தகவல் தொடர்பு: குழந்தைகள் சிறிய வாக்கியங்களைப் பேசவும், பொருள்களை சுட்டிக்காட்டவும் முடியும். அவர்கள் எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும், எளிய சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களைப் புரிந்துகொள்ளவும் முடியும்.சமூக மற்றும் உணர்ச்சி: இந்த வயதில், குழந்தைகள் மற்ற பெரியவர்கள் மற்றும் குழந்தைகளை பின்பற்ற விரும்புவர். அவர்கள் தங்களையும் பிற குடும்ப உறுப்பினர்களையும் படங்களில் அல்லது கண்ணாடியில் அடையாளம் காணமுடியும்.

நோய்த்தடுப்பு மைல்கற்கள்

15 வது மாதம்: MMR தடுப்பூசியின் இரண்டாவது டோஸ், மூன்று நோய்த்தொற்றுகள், தட்டம்மை, சளி மற்றும் ரூபெல்லா ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.நிமோனியாவிலிருந்து பாதுகாக்க PCV இன் பூஸ்டர் டோஸ் தேவைப்படுகிறது, ஏனெனில் முதல் 3 டோஸ்களால் கொடுக்கப்பட்ட பாதுகாப்பு
இப்போது குறையத் தொடங்கும்.

வெரிசெல்லா: இது சிற்றம்மையிலிருந்து பாதுகாக்கிறது. உகந்த நடவடிக்கைக்கு இது 15வது மாதத்தில் கொடுக்கப்பட வேண்டும்.16-18வது மாதம்: டிப்தீரியா, டெட்டனஸ், கக்குவான் இருமல், மூளைக்காய்ச்சல் மற்றும் போலியோ ஆகியவற்றிற்கு எதிராக முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்ய DTwP, Hib மற்றும் IPV ஆகியவற்றின் பூஸ்டர்
டோஸ்கள் கொடுக்கப்படுகின்றன.

18வது-24வது மாதம்: ஹெபடைடிஸ் A மற்றும் வெரிசெல்லாவின் இரண்டாவது டோஸ்கள் பாதுகாப்பை நிறைவு செய்ய கொடுக்கப்படுகின்றன.இந்த உலக நோய்த்தடுப்பு வாரத்தில், நம் குழந்தைகளுக்கு 7 நட்சத்திர பாதுகாப்பை வழங்கும் இந்த 7 முக்கியமான தடுப்பூசிகளை தவறவிடாமல் இருப்போம் என்று உறுதியெடுப்போம். இதனால் அவர்கள் தங்கள் வளர்ச்சியின் மைல்கற்களைத் தவறவிடாமல் ஆரோக்கியமான பெரியவர்களாக வளரலாம்.

The post பச்சிளங் குழந்தையின் முதல் இரு வருடங்கள் appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dr ,S.Balasubramanian ,Dinakaran ,
× RELATED இளைஞர்களை பாதிக்கும் உயர் ரத்த அழுத்தம்!