×

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாஜக கூட்டணி 21 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 10 தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பு

சென்னை: தமிழநாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாஜக கூட்டணி 21 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 10 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்துள்ளன. கனிமொழி போட்டியிட்ட தூத்துக்குடி மற்றும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் போட்டியிட்ட சசிகாந்த் செந்தில் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிம் புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவைத்தொகுதி என 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் திமுக கூட்டணியை எதிர்த்து பாமக, அமமுக, தமக, தனி சின்னத்தில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம், பாரிவேந்தரின் ஐ.ஜே.கே, தேவேந்திர யாதவ்வின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளோடு களமிறங்கிய பாஜக கூட்டணி மொத்தம் 21 தொகுதிகளில் படுதோல்வியடைந்து டெபாசிட் தொகையை இழந்துள்ளது. அதிலும் குறிப்பாக 19 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட பாஜக டெபாசிட் தொகையை இழந்துள்ளது.

வடசென்னையில் போட்டியிட்ட பால்கனகராஜ், சிதம்பரத்தில் கார்த்தியாயினி, கரூரில் செந்தில்நாதன், நாகையில் ரமேஷ், நாமக்கல்லில் கே.பி.ராமலிங்கம், தஞ்சையில் எம்.முருகானந்தம், திருப்பூரில் ஏ.பி.முருகானந்தம், திருவள்ளூரில் பொன்.பாலகணபதி, திருவண்ணாமலையில் அஸ்வத்தாமன், விருதுநகரில் ராதிகா சரத்குமார், பெரம்பலூரில் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் ஆகியோர் டெபசிட்டை பரிகொடுத்துள்ளனர்.

இதே போல் பாமக போட்டியிட்ட 10 தொகுதிகளில் 6 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. திண்டுக்கலில் போட்டியிட்ட திலகபாமா, கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட தேவதாஸ், காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட ஜோதி வெங்கடேஷன், மயிலாடுதுறையில் ம.க.ஸ்டாலின், சேலத்தில் அண்ணாதுரை, மற்றும் விழுப்புரத்தில் முரளிசங்கர் ஆகியோர் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் ஈரோட்டில் போட்டியிட்ட விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூரில் வி.என்.வேணுகோபால் தூத்துக்குடியில் விஜயசீலன் ஆகிய 3பேரும் படுதோல்வியடைந்து டெபாசிட் இழந்தனர். அமமுக போட்டியிட்ட 2 இடங்களில் திருச்சியில் போட்டியிட்ட செந்தில்நாதன் டெபாசிட் இழந்தார் .

தேமுதிக மற்றும் இரட்டை இலை சின்னத்தில் எஸ்டிபிஐ மற்றும் புதிய தமிழகம் கட்சியுடன் திமுக கூட்டணிக்கு எதிராக களமிறங்கிய அதிமுக கூட்டணி 10 இடங்களில் படுதோல்வியை தழுவி டெபாசிட் இழந்தது. இதில் 33 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 8 இடங்களில் டெபசிட் இழந்தது.

தென்சென்னையில் போட்டியிட ஜெயவர்தன், கன்னியாகுமரியில் போட்டியிட்ட பசலியான் நாசரேத், ராமநாதபுரத்தில் போட்டியிட்ட ஜெயபெருமாள், தேனியில் நாராயணசாமி, தூத்துகுடியில் சிவசாமி வேலுமணி, நெல்லையில் ஜான்சிராணி, வேலூரில் பசுபதி, புதுச்சேரியில் தமிழ்வேந்தன் ஆகியோர் டெபாசிட் இழந்தனர்.

The post தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாஜக கூட்டணி 21 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 10 தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puducherry ,BJP ,Adimuga Coalition ,Chennai ,BJP alliance ,Tuthukudi ,Congress ,Sasikanth Sendil ,Dimuka alliance ,Dinakaran ,Aditmuga Coalition ,
× RELATED புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு...