×

கோவையில் சுடச்சுட மட்டன் பிரியாணி விநியோகம்: ‘ஆடு கசாப்பு கடைக்குதானே போகும்…’ சமூக வலைதளங்களில் டிரெண்டிங்

கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதியில் மும்முனை போட்டி நிலவியது. இதில், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார். பாஜ வேட்பாளர் அண்ணாமலை 2வது இடம் பிடித்துள்ளார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் 5,71,150 வாக்குகள் பெற்று வென்றார். பாஜ சார்பாக போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 3,92,007 வாக்குகள் பெற்றார். அவர் பெற்ற ஓட்டுகள்கூட தற்போது அண்ணாமலை பெறவில்லை.

இத்தொகுதியில் நான் வெற்றிபெற்றால், ‘ஒன்றிய அமைச்சர் ஆகிவிடுவேன், தொழில் நெருக்கடி எல்லாம் தீர்ந்துவிடும்’ என பாஜ வேட்பாளர் அண்ணாமலை மார்தட்டினார். ஆனால், தற்போது கடும் பின்னடைவை சந்தித்துள்ளதால் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். ‘‘ஆடு கசாப்பு கடைக்குதானே போகும்… ஆடு பிரியாணிக்கு ரெடியாகிவிட்டது….’’ என்ற விமர்சனம் வைரலாகியுள்ளது. அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அறிமுக கூட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளர் கல்யாணசுந்தரம் பேசுகையில், ‘‘கோவை தொகுதி எஸ்.பி. வேலுமணி என்கிற சிங்கத்தின் கோட்டை… இந்த சிங்க கோட்டைக்குள் அண்ணாமலை என்கிற ஆடு நுழைந்துள்ளது. சிங்க கோட்டையில் ஆடு நுழைந்தால், அந்த ஆடு என்ன ஆகும்? என்பதை உங்கள் சாய்ஸ்க்கு விட்டு விடுகிறேன்’’ என பேசினார்.

கோவை தொகுதி திமுக பொறுப்பாளரும், தமிழக தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா கோவை தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில் கோவையில் அண்ணாமலை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. உடனே அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ‘‘இத்தொகுதியில் திமுக வெற்றிபெறும். அதன் பிறகு, எல்லோருக்கும் மட்டன் பிரியாணி போட வேண்டும் என்று சொல்லி இருந்தேன். கண்டிப்பாக எல்லாருக்கும் மட்டன் பிரியாணி கன்பார்ம்’ என்று கூறினார். இதனால், உற்சாகம் அடைந்த திமுக தொண்டர்கள், வடவள்ளி பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, அமைச்சருக்கு ஆட்டுக்குட்டி பரிசு வழங்கினர்.

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சொன்னதுபோலவே கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார், பாஜ வேட்பாளர் அண்ணாமலை தோல்வி அடைந்துள்ளார். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளர் சித்திக் ஏற்பாட்டின்பேரில், கோவை மாநகர் மாவட்ட திமுக துணை செயலாளர் கோட்டை அப்பாஸ் கோவை கோட்டைமேடு பகுதியில் சுடச்சுட மட்டன் பிரியாணி விநியோகம் செய்தார். இதை, பொதுமக்கள் ருசித்து சாப்பிட்டு சென்றனர். இது, சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

The post கோவையில் சுடச்சுட மட்டன் பிரியாணி விநியோகம்: ‘ஆடு கசாப்பு கடைக்குதானே போகும்…’ சமூக வலைதளங்களில் டிரெண்டிங் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,DMK ,Ganapathi Rajkumar ,BJP ,Annamalai ,AIADMK ,Singhai Ramachandran ,Dinakaran ,
× RELATED ஆய்வுக்கூட கட்டுமான பணி துவக்கம்