×

வேலூர் பழைய பைபாஸ் சாலையில் விபத்தில் காயமடைந்த வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய கலெக்டர்

*பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

வேலூர் : வேலூர் பழைய பைபாஸ் சாலையில் விபத்தில் காயமடைந்த வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய கலெக்டர், பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு செய்து விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. போக்குவரத்து ெநரிசல் மிகுந்த பழைய பைபாஸ் சாலையில் கடந்த 1 மாதத்திற்கு மேலாக இப்பணி நடந்து வருகிறது. இப்பணிகளை விரைவாக முடிக்ககோரி சில நாட்களுக்கு முன் அப்பகுதி வணிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், காட்பாடி அடுத்த சேவூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன்(36), ஐடி ஊழியர். இவர் நேற்று காலை பைக்கில் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் சென்றபோது, பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி தவறி விழுந்தார். அப்போது, அவ்வழியாக வந்த லாரி அரவிந்தனின் கால் மீது ஏறியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்கும் பணியில் அங்கிருந்தவர்கள் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த கலெக்டர் சுப்புலட்சுமியும், காரில் இருந்து இறங்கி வாலிபரை மீட்கும் பணியில் ஈடுபட்டார். மேலும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு வாலிபர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார். அப்போது பாதாள சாக்கடை பணிகள் நடப்பதால் சாலை சீராக இல்லாமல் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் விரைவாக முடிக்கும்படி உத்தரவிட்டார். மேலும் பணிகள் நடைபெறும் பகுதிகளில் வாகன ஓட்டிகள் வராத வகையில், தடுப்புவேலி அமைத்து வாகன போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இதற்கிடையில் தகவலறிந்து மாநகராட்சி கமிஷனர் ஜானகி, ஆர்டிஓ கவிதா ஆகியோர் அங்கு வந்தனர். மேலும் விபத்து குறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு வாரத்தில் பணிகளை முடிக்க உத்தரவு

பாதாள சாக்கடை பணிகள் குறித்து கமிஷனர் ஜானகியிடம் கேட்டபோது, ‘பாதாள சாக்கடை பணிகளை எடுத்த ஒப்பந்ததாரரிடம் ஒரு வாரத்திற்குள் பணிகளை தரமாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விரைவாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.

The post வேலூர் பழைய பைபாஸ் சாலையில் விபத்தில் காயமடைந்த வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய கலெக்டர் appeared first on Dinakaran.

Tags : Vellore ,VELOOR ,Dinakaran ,
× RELATED வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நகைக் கடையில் கொள்ளை முயற்சி..!!