×

ஜாதி, மதம், மொழி ரீதியாக வாக்குகள் சேகரிப்பதை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய ஆணையம் அமைக்க கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஜாதி, மத, மொழி ரீதியாக வாக்கு சேகரிக்கும் ஊழல் நடவடிக்கையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய சுதந்திரமான ஆணையம் அமைக்கக் கோரிய வழக்கில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியைச் சேர்ந்த ராஜேஷ் அனூர் மகிமைதாஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ஜாதி, மதம் மற்றும் மொழி ரீதியாக வாக்குகளை சேகரிப்பது ஊழல் நடவடிக்கையாகும். அதேபோல, வெறுப்பு பேச்சுக்களை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேர்தல் நேரங்களிலும், தேர்தல் அல்லாத காலங்களிலும் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் லாபத்துக்காக ஜாதி, மதம், மொழி ரீதியாக வாக்காளர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும், அரசியல் கட்சிகள் மக்களை பிரித்தாள்கின்றன. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. தேர்தல் நேரங்களில் மக்களை பிளவுபடுத்துவதைத் தடுக்க தேர்தல் ஆணையத்தில் எந்த ஒழுங்குமுறையும் இல்லை.

எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதைக் கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய சுதந்திரமான ஆணையத்தை அமைக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு, இணைந்த மனுவுக்கு ஆறு வாரங்களில் பதிலளிக்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.

The post ஜாதி, மதம், மொழி ரீதியாக வாக்குகள் சேகரிப்பதை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய ஆணையம் அமைக்க கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,High Court ,CHENNAI ,Chennai High Court ,Chief Election Commission of India ,Vellore ,Dinakaran ,
× RELATED சாதி, மதம், மொழி ரீதியாக வாக்கு...