×

டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து 350 காஸ் சிலிண்டர்களுடன் ஆற்றுக்குள் பாய்ந்த லாரி: திருவாரூர் அருகே பரபரப்பு

மன்னார்குடி: திருவாரூர் அருகே நேற்று மாலை டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து 350 காஸ் சிலிண்டர்களுடன் ஆற்றுக்குள் லாரி பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த இடையர் நத்தம் கிராமத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான காஸ் சிலிண்டர் நிரப்பும் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் பல ஊர்களுக்கு வணிக மற்றும் வீட்டு பயன் பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை இந்த ஆலையில் இருந்து வீட்டு பயன்பாட்டிற்கான 350 காஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு நாகப்பட்டினத்திற்கு தனியார் லாரி ஒன்று புறப்பட்டு சென்றது. நாகப்பட்டினம் நீலக்குடியை சேர்ந்த ஆனந்தன் (50) என்பவர் லாரியை ஓட்டினார்.

மன்னார்குடி – திருவாரூர் பிரதான சாலையில் கோரையாற்று பாலம் அருகில் சென்றபோது திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த காஸ் சிலிண்டர்கள் ஆற்றுக்குள் சிதறி விழுந்தன. தகவலறிந்து மீட்பு குழுவினர் மற்றும் கூத்தாநல்லூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றுக்குள் சிதறி கிடந்த காஸ் சிலிண்டர்களை பாதுகாப்பாக மீட்டு வேறொரு லாரி மூலம் நாகப்பட்டினத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ராட்சச கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது. காயமடைந்த லாரி டிரைவர் ஆனந்தன், மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

The post டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து 350 காஸ் சிலிண்டர்களுடன் ஆற்றுக்குள் பாய்ந்த லாரி: திருவாரூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Pandemonium ,Tiruvarur ,Mannargudi ,Thiruvarur ,Indian Oil Company ,Idiyar Natham village ,Dinakaran ,
× RELATED லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார்...