×

கேரளாவிலும் மீன்பிடி தடைகாலம் சென்னைக்கு மீன்கள் வரத்து குறைந்தது: விலை அதிகரிப்பால் மீன்பிரியர்கள் ஏமாற்றம்

திருவொற்றியூர்: தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால், மீனவர்கள் பைபர் படகுகளில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மீன்கள் பிடிப்பதால், மீன்களின் வரத்து வழக்கத்தைவிடவும் குறைவாக உள்ளது. மீன்களின் விலையும் இரு மடங்காக உயர்ந்துள்ளது. காசிமேடு துறைமுகத்திலும் மீன்கள் வரத்து குறைந்தே காணப்படுகின்றன. ஷீலா மீன்கள் விலை குறைந்து காணப்படுவால், இந்த மீனையே அதிகம் வாங்கி செல்கின்றனர்.

வஞ்சிரம், வவ்வால் போன்ற பெரிய மீன்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால், கேரளாவில் இருந்து மீன்கள் வந்து கொண்டிருந்தன. எனவே, நிலைமையை ஓரளவு தட்டுப்பாடு இல்லாமல் சமாளிக்க முடிந்தது.  இப்போது கேரளாவிலும் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால், சென்னையில் மீன்கள் வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பெரிய மீன்களின் வரத்து குறைந்ததால், சாளை, நெத்திலி, சங்கரா, இறால் போன்ற சிறிய மீன்களே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதனால், பெரிய மீன்களை வாங்க சென்ற மீன் பிரியர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். முரல் மீன்கள்கூட விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, கலிங்க முரல் கிலோ ரூ.350லிருந்து ரூ.500க்கும், வாடுமுரல் ரூ.260லிருந்து ரூ.350க்கும் உயர்ந்திருந்துள்ளது. மீன்கள் விலையும் உயர்ந்துவிட்டது.

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் வரும் 16ம் தேதி முடிவடைந்த பிறகு தான் பெரிய மீன்களின் வரத்து இருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே மீன்கள் விலை உயர்வால், மீன்பிரியர்கள் நொந்துபோயுள்ள நிலையில், சிக்கன் விலையும் உயர்ந்தே காணப்படுகிறது.. வருகிற 16ம் தேதி வரை, சிக்கன் விலையில் இன்னும் விலை உயர்வு இருக்கலாம் என்பதால் அசைவ பிரியர்கள் உச்சக்கட்ட கவலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

The post கேரளாவிலும் மீன்பிடி தடைகாலம் சென்னைக்கு மீன்கள் வரத்து குறைந்தது: விலை அதிகரிப்பால் மீன்பிரியர்கள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Chennai ,Tiruvottiyur ,Tamil Nadu ,Kasimedu port ,
× RELATED திருவொற்றியூரில் பெண்ணை முட்டிய...