×

தமிழ்நாட்டிலேயே அதிக வருவாய் அளிக்கும் திருப்போரூர் சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு: பழைய இடத்திலேயே கட்டித்தர கோரிக்கை

திருப்போரூர்: தமிழ்நாட்டிலேயே அதிக வருவாய் அளிக்கும் திருப்போரூர் சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என்றும், பழைய கட்டிடத்தை அகற்றி அதே இடத்தில் கட்டித்தரவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தெற்கு மாடவீதியில் காவல் நிலையம் மற்றும் சார்-பதிவாளர் அலுவலகம் அருகருகே இயங்கி வருகிறது.

ஓஎம்ஆர் சாலையில் உள்ள திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலூர், படூர், தாழம்பூர், சிறுசேரி, புதுப்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர், முட்டுக்காடு, கோவளம், திருவிடந்தை நெம்மேலி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களின் சொத்துக்கள் தொடர்பாக விற்பனை, ஒப்பந்தம், குத்தகை, அடமானம், உயில், குடும்ப ஏற்பாடு ஆவணங்கள் இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகின்றன.

கடந்த, 1886ம் ஆண்டு தொடங்கப்பட்ட திருப்போரூர் சார்-பதிவாளர் அலுவலகம் 137 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது.  தமிழ்நாட்டிலேயே அதிக வருவாய் அளிக்கும் சார்-பதிவாளர் அலுவலகமாக முதலிடத்தை திருப்போரூர் பிடித்துள்ளது. ஆண்டுக்கு 25 ஆயிரம் ஆவணங்கள் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு திருப்போரூர் சார்-பதிவாளர் அலுவலகத்தை மாதிரி சார்பதிவு அலுவலகமாக தரம் உயர்த்தி நவீன வசதிகளுடன் கட்ட ஒப்புதல் அளித்து, அதற்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த அலுவலக கட்டிடத்தை ஆய்வு செய்தனர். கடந்த 2008ம் ஆண்டு புதிய சார்- பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால் அதை இடிக்க முடியாது என்று கூறி விட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, சார்பதிவகத்தை வேறு எங்காவது இடமாற்றம் செய்து புதிய கட்டிடம் கட்டவும் பொதுப்பணித்துறை பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது.

குறிப்பாக, திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் தலைமையிடமாகவும், ஒன்றிய தலைமையிடமாகவும் இது உள்ளது. இங்கு வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், கல்வித்துறை அலுவலகம், வேளாண் அலுவலகம், மின் வாரிய அலுவலகம் உள்ளிட்ட அனைத்து தலைமை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பல்வேறு பெயர் மாற்றங்களுக்கு வரும் பொதுமக்கள் ஒரே பகுதியில் தங்கள் வேலைகளை முடித்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், திருப்போரூர் சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்தால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என இங்குள்ள வழக்கறிஞர்கள், ஆவண எழுத்தர்கள், பொதுமக்கள், அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருப்போரூரில் உள்ள சார்-பதிவாளர் அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு அதே இடத்தில் லிப்ட், ஏசி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் புதிய சார்-பதிவாளர் அலுவலகத்தை கட்டித்தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தமிழ்நாட்டிலேயே அதிக வருவாய் அளிக்கும் திருப்போரூர் சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு: பழைய இடத்திலேயே கட்டித்தர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruporur sub-registrar ,Tamil Nadu ,Tiruporur ,Tiruporur sub-registrar ,Police Station ,Sub-Registrar Office ,Tiruporur South Madaveedi, Chengalpattu District ,Tiruporur Sub-Registrar Office ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் அரசுப்பள்ளி விழாவில் பாம்பு புகுந்ததால் மாணவிகள் ஓட்டம்