×

ஆன்லைன் விளையாட்டில் ரூ.93 ஆயிரம் இழந்த ஐடி ஊழியர்: போலீசார் விசாரணை

சோழிங்கநல்லூர்: ஆன்லைன் விளையாட்டில் ஐடி ஊழியர் ரூ.93 ஆயிரம் இழந்த விவகாரம் குறித்து வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வியாசர்பாடி பாலமுருகன் தெருவில் வசித்து வருபவர் ஜனார்த்தனன் (43), ஐடி நிறுவன ஊழியர். கடந்த 27ம் தேதி வாட்ஸ்அப்பில் வந்த ஆன்லைன் டாஸ்க் பிசினஸ் என்ற விளம்பரத்தின் லிங்க்கைப் பார்த்து அதன் உள்ளே சென்று விளையாடியுள்ளார். அந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கை ஜனார்த்தனன் சரியாக செய்து முடித்தார்.

இதனால் அவரது வங்கிக் கணக்கில் ரூ.120 கிரெடிட் ஆனது. அதன் பிறகு தொடர்ந்து பலமுறை பணம் செலுத்தி டாஸ்க் விளையாட்டை தொடர்ந்துள்ளார். இதில் அவ்வப்போது பணம் அனுப்பியுள்ளனர். அதன் பிறகு ரூ.30 ஆயிரம் செலுத்திய பிறகு அந்த பணம் வரவில்லை. உடனடியாக பணத்தை திரும்ப பெறுவதற்கு குறிப்பிட்ட ஒரு வெப்சைட்டில் சென்றபோது, ரூ.50 ஆயிரம் கட்டினால் இழந்த முழு பணமும் வந்து விடும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து மீண்டும் பணத்தைக் கட்டியுள்ளார். மொத்தம் ரூ.93 ஆயிரத்தை கட்டிய பிறகு மீண்டும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் வியாசர்பாடி குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் குறிப்பிட்ட அந்த செயலி மற்றும் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்ட தொலைபேசி எண் ஆகியவற்றை வைத்து மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆன்லைன் விளையாட்டில் ரூ.93 ஆயிரம் இழந்த ஐடி ஊழியர்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Choshinganallur ,Vyasarpadi ,Janardhanan ,Vyasarpady Balamurugan Street ,Dinakaran ,
× RELATED மாதவரம் – சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில்...