×

அரசு பள்ளிகளில் படிப்பவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த புதிய புத்தகங்கள் தயாரிப்பு: ஆசிரியர்கள், மாணவர்கள் படைப்புகளை 30ம் தேதிக்குள் அனுப்ப அறிவுறுத்தல்

சேலம்: தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு சலுகைகளும், திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனைமேம்படுத்த, வாசிப்பு இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் இதனை தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் படைப்புகளுடன் புத்தகங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதற்காக தங்களது படைப்புகளை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை, நட, ஓடு, பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன. முதல் கட்டமாக 53 புத்தகங்களும், இரண்டாம் கட்டமாக 70 புத்தகங்களும் அச்சிடப்பட்டு, அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, இக்கல்வியாண்டில் 127 புத்தகங்கள் உருவாக்கப்பட உள்ளன. இப்புத்தக உருவாக்கத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட உள்ளது. இதனையடுத்து, அனைத்து வகை அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் தங்களது படைப்புகளை அனுப்பலாம். அத்துடன் மாணவர்களின் கதைகளையும் சேகரித்து அனுப்பலாம். தேர்வு செய்யப்படும் கதைகள், வாசிப்பு இயக்கத்தின் தேவைக்கேற்ப ஆசிரியர் குழுவால் வடிவமைக்கப்படும்.

கதைகளை தேர்ந்தெடுக்கவோ, நிராகரிக்கவோ, திருத்தங்கள் செய்யவோ அரசு உயர் அலுவலர்களால் அமைக்கப்பட்ட சீராய்வுக் குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு. சீராய்வுக் குழுவின் முடிவே இறுதியானது. ஆசிரியர்கள் வாசிப்பு இயக்கத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு தங்களின் கதைகளை வடிவமைக்க வேண்டும். இதுதொடர்பான முழுமையான புரிதலுக்கு, அவர்களது பள்ளியில் உள்ள வாசிப்பு இயக்கப் புத்தகங்களை வாசிக்கவும். எளிய மொழியிலும், சின்னச் சின்ன வாக்கியங்களிலும் கதைகள் இருக்க வேண்டும். படைப்புகளை தமிழிலேயே அனுப்ப வேண்டும். படைப்புகள் தங்களது சொந்தக் கற்பனையில் எழுதியவையாக இருக்க வேண்டும். ஒருவர் அதிகபட்சம் 5 கதைகள் வரை அனுப்பலாம். கதைகளைத் தட்டச்சு செய்து அனுப்பி வைக்க வேண்டும். மாணவர்கள் தங்களது படைப்பை அனுப்பும் போது, அம்மாணவர் பெயர், வகுப்பு, பள்ளி விவரத்தோடு அனுப்பி வைக்க வேண்டும். கதைகள் தெரிவு செய்யப்பட்டால் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். மாணவர்களின் ெசாந்த படைப்பாக இருந்தாலும், ஏற்கனவே வேறு ஏதேனும் புத்தகத்திலோ அல்லது இதழ்களிலோ பதிப்பிக்கப்பட்டிருந்தால் அதனைக் குறிப்பிட வேண்டும்.

மொழிபெயர்ப்புக் கதைகளாக இருப்பின், அது பற்றிய முழு விவரத்தை குறிப்பிட வேண்டும். கதையின் முடிவில் எழுதியவர் பெயர், தொடர்பு எண் மற்றும் முகவரியைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். தேர்வாகும் கதைகளுக்கு தனியாக மதிப்பூதியம் எதுவும் வழங்கப்படாது. படைப்பாளியின் பெயர், புத்தக மேலட்டையில் அச்சிடப்படும். வார்த்தைகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை, `நுழை’ என்ற தலைப்பில் 80 முதல் 100 வார்த்தைகளுக்குள்ளும், `நட’ என்ற தலைப்பில் 150 முதல் 250 வார்த்தைகளுக்குள்ளும் இருக்க வேண்டும். இதேபோல், `ஓடு’ என்ற தலைப்பில் 300 முதல் 400 வார்த்தைக்குள்ளும், `பற’ என்ற தலைப்பில் 400 முதல் 500 வார்த்தைக்குள்ளும் இருக்க வேண்டும். வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்குள், பள்ளியின் எமிஸ் ஐடி மூலமாக படைப்புகளை அனுப்ப வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

 

The post அரசு பள்ளிகளில் படிப்பவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த புதிய புத்தகங்கள் தயாரிப்பு: ஆசிரியர்கள், மாணவர்கள் படைப்புகளை 30ம் தேதிக்குள் அனுப்ப அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Salem ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பயணிகள் வசதிக்காக ₹2.5 கோடியில் சேலம்...