×

ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? இன்று காலை 11 மணிக்கு தெரியும்: பாஜ – இந்தியா கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி

புதுடெல்லி: நாடு முழுவதும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், காலை 11 மணி அளவில் முன்னணி நிலவரங்களுடன் ஒன்றியத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரியவரும். இதில், பாஜ, இந்தியா கூட்டணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடத்தப்பட்டது. இத்துடன், ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும், சில மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில், அருணாச்சல், சிக்கிம் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் ஜூன் 2ம் தேதியுடன் முடிவடைவதால் அவ்விரு மாநிலங்களுக்கு மட்டும் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மக்களவை தேர்தல், ஆந்திரா, ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன. கடந்த 2 மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்று, 10 ஆண்டாக ஒன்றியத்தில் ஆட்சி செய்து வரும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த இம்முறை காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 28க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்து வலுவான இந்தியா கூட்டணியை அமைத்து மக்களவை தேர்தலை சந்தித்துள்ளன. இதனால் தேர்தல் பிரசாரங்களில் அனல் பறந்தது.

இம்முறை, 400 தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு தேர்தலை சந்தித்த பாஜ கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கணிக்கப்பட்டுள்ளது. இதை முற்றிலும் நிராகரித்துள்ள இந்தியா கூட்டணி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, குறைந்தபட்சம் 295 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனால், பாஜ, இந்தியா கூட்டணிகள் இடையே யார் ஆட்சியை பிடிப்பது என்பதில் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த பரபரப்பான சூழலில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. நாடு முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்ட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். காலை 11 மணி அளவில் முன்னணி நிலவரங்களுடன், ஒன்றியத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார் என்பது உறுதியாகி விடும்.

கடந்த 2 மக்களவை தேர்தலிலும் தோல்வி அடைந்த நிலையில் பிரதான தேசிய கட்சியான காங்கிரசுக்கு இத்தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதே போல, பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்து வரும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கும் இத்தேர்தலில் வெற்றி பெறுவது அவசியமாக உள்ளது. டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில் டெல்லியிலும், பஞ்சாப்பிலும் பாஜவை வீழ்த்திக் காட்ட கெஜ்ரிவால் கடுமையாக பிரசாரம் செய்துள்ளார். எனவே அக்கட்சியின் எதிர்காலமும் இத்தேர்தல் முடிவு மூலம் நிர்ணயிக்கப்பட உள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உடைத்து பாஜ ஆட்சியை பிடித்துள்ளது. அதற்கு பழிக்கு பழி தீர்க்க மக்களவை தேர்தலில் அவ்விரு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இணைந்து களமிறங்கி உள்ளன. இதனால் சிவசேனா, தேசியவாத காங்கிரசுக்கும் மக்களவை தேர்தல் முடிவு மிகுந்த அவசியமாகி உள்ளது. பீகாரில் பாஜ, நிதிஷின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக மீண்டும் காங்கிரஸ், லாலுவின் ஆர்ஜேடி தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. நிதிஷின் துரோகத்திற்கு பழிதீர்க்க ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகள் அங்கு கடுமையாக உழைத்துள்ளதால், பீகாரிலும் கடும் போட்டி நிலவுகிறது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும், அனைத்து விதமான கருத்துக்கணிப்பிலும் திமுக கூட்டணியே அமோக வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளன. இதே போல, கேரளாவிலும் பாஜவுக்கு பலத்த அடி விழும் என எதிர்பார்க்கப்
படுகிறது. உபியில் மீண்டும் காங்கிரஸ், சமாஜ்வாடி கூட்டணி அமைந்திருப்பது பாஜவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானாவிலும், இமாச்சலிலும் ஆட்சியை பிடித்ததன் மூலம் அங்கு காங்கிரசின் கை ஓங்கியிருக்கிறது. இதனால் பாஜ அவ்வளவு எளிதாக வெற்றி பெறும் நிலை எங்கும் இல்லை. ஆனாலும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் செய்து பாஜ வெற்றி பெற முயற்சிக்கும் என்பதால் அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட வேண்டுமென இந்தியா கூட்டணி பிரதிநிதிகள் தேர்தல் ஆணையத்திடம் நேரில் வலியுறுத்தி உள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் இந்தியா கூட்டணி கட்சி பிரதிநிதிகள் மிகுந்த கவனத்துடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 80 நாட்களுக்கும் மேலாக தேர்தலுக்காக தீவிரமாக உழைத்த அரசியல் கட்சிகள் மக்களின் தீர்ப்புக்காக இன்று காத்திருக்கின்றன. இதே போல, ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் மீண்டும் ஆட்சியை பிடிக்குமா, ஆந்திராவில் பாஜ உடனான தெலுங்கு தேசம் கூட்டணியை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சமாளித்து மீண்டும் ஆட்சிக்கு வருமா என்பதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

 

The post ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? இன்று காலை 11 மணிக்கு தெரியும்: பாஜ – இந்தியா கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,India ,New Delhi ,Lok Sabha elections ,India alliances ,Dinakaran ,
× RELATED 7 மாநிலங்களில் 13 தொகுதிகளில் நடந்த...