×

பழநி பகுதியில் தொடர் மழை; நிரம்பி வழிகிறது வரதமாநதி அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த வாரம் தொடர் மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதன்பின் திடீர் வெப்ப அலை வீசியது. இந்நிலையில் நேற்று இரவு பழநி நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் திடீர் மழை பெய்தது. இதனால், பழநி பகுதியின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமான அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. பழநி அருகே 67 அடி உயரமுள்ள வரதமாநதி அணை உள்ளது. இதன் மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

தொடர் மழை காரணமாக இன்று காலை நிலவரப்படி, 67 அடி உயரமுள்ள வரதமாநதி அணை முழுவதும் நிரம்பியது. அணைக்கு வரும் 106 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் 25 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதுபோன்று, 80 அடி உயரமுள்ள குதிரையாறு அணையின் நீர்மட்டம் 56.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 35 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 7 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 65 அடி உயரம் உள்ள பாலாறு -பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 37.60 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 201 கனஅடியாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 9 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post பழநி பகுதியில் தொடர் மழை; நிரம்பி வழிகிறது வரதமாநதி அணை: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Palani ,Varadamanadi Dam ,Dindigul district ,Palani Nagar ,Varadamanati Dam ,Dinakaran ,
× RELATED பழநி உண்டியல் காணிக்கையில் ‘கை வைத்த’ பேராசிரியை கைது