×

ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? நாளை காலை 11 மணிக்கு முடிவு தெரியும்: பாஜக – ‘இந்தியா’ கூட்டணி இடையே கடும் போட்டி

புதுடெல்லி: கடந்த ஏப். 19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் முடிந்த நிலையில், நாளை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 11 மணி அளவில் ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? என்பது குறித்த முன்னிலை நிலவரம் தெரியவரும். ஒன்றியத்தில் யார் ஆட்சி அமைக்கப் போவது என்ற போட்டி பாஜக – ‘இந்தியா’ கூட்டணி இடையே இருந்து வருகிறது. நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவையைத் தேர்வு செய்வதற்காக, மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக (ஏப். 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) தேர்தல் நடத்தப்பட்டது. முதல் கட்டத்தில் 66.14%, 2ம் கட்டத்தில் 66.71%, 3ம் கட்டத்தில் 65.68%, 4ம் கட்டத்தில் 69.16%, 5ம் கட்டத்தில் 62.2%, 6ம் கட்டத்தில் 63.36%, 7ம் கட்டத்தில் 61.63% வாக்குகள் பதிவாகின. சராசரியாக இந்த நாடாளுமன்ற தேர்தலில் 64.98% வாக்குகள் அதாவது 65% வாக்குகள் பதிவாகி உள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையானது நாளை காலை 8 மணிக்கு அனைத்து மையங்களிலும் தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணும் பணி கண்காணிக்கப்படும். ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் (ஐஏஎஸ் அதிகாரிகள்) முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் சுற்று வாரியாக வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்படும். நாளை காலை 11 மணிக்கு ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கபோவது யார் என்பது குறித்து முன்னிலை நிலவரம் தெரியவரும்.

வாக்கு எண்ணும் மையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், தேர்தல் அலுவலர்கள் பின்பற்ற வேண்டி விதிமுறைகள் குறித்த விரிவான அறிக்கையை தேர்தல் ஆணையம் வௌியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவு நிறைவடையும்போது, துணை தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பது முன்பு வழக்கமாக இருந்தது. ஆனால், இந்த நடைமுறை தற்போதைய தேர்தலில் பின்பற்றப்படவில்லை. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாளான இன்று (ஜூன் 3) தேர்தல் ஆணையம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக, பத்திரிகையாளர் சந்திப்பை தேர்தல் ஆணையம் நடத்துவது இது முதல்முறை என்பதால், நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை குறித்த விபரங்களையும், இதற்கு முன்பு 7 கட்டங்களாக நடந்த தேர்தல் செயல்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்த விபரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களும், இல்லை எங்களுக்கு தான் தேர்தல் முடிவுகள் சாதகமாக இருக்கும் என்று எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களும் கூறி வருகின்றனர்.

அதனால் எந்த கட்சியின் கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சியை அமைக்க உள்ளது என்பது நாளை முற்பகலில் தெரிந்துவிடும். இரு கூட்டணி தொண்டர்களும் தேர்தல் வெற்றியை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். நாளைய தேர்தல் முடிவுகள் அடுத்த 5 ஆண்டுக்கான நாட்டின் தலை எழுத்தை நிர்ணயிக்க உள்ளதால் சாதாரண குடிமகன் முதல் பெரும் தொழில்அதிபர்கள் வரை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? நாளை காலை 11 மணிக்கு முடிவு தெரியும்: பாஜக – ‘இந்தியா’ கூட்டணி இடையே கடும் போட்டி appeared first on Dinakaran.

Tags : Union ,BJP ,India ,alliance ,New Delhi ,Dinakaran ,
× RELATED மராட்டிய மாநில பாஜக தேர்தல்...