×

சென்னையில் அடுத்த ஒரு மாதத்தில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உறுதி

சென்னை: சென்னையில் அடுத்த ஒரு மாதத்தில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பிராணிகள் நலவாரியம் சார்பில் செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பிராணிகளை வளர்ப்போர் பாதுகாப்பற்ற முறையில் அவற்றை வெளியில் கொண்டு சொல்லக் கூடாது என பலமுறை எச்சரித்தும் அலட்சியமாக உள்ளனர். சட்டங்கள் செல்லப் பிராணிகளுக்கு சாதகமாக இருந்தாலும் கூட, மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்போது, பிராணிகளை வளர்ப்போர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நாயை நாய் என்று சொல்லக்கூடாது, குழந்தை என்று சொல்ல வேண்டும் என ஆர்வலர்கள் கூறுகின்றனர். நம் குழந்தையை, மற்றொரு குழந்தையை கடிக்க விடுவோமா என அவர்கள் சிந்திக்க வேண்டும். விலங்குகள் நல ஆர்வலர்களுடன் கலந்துபேசி, நீதிமன்றத்தை அணுகி, எத்தகைய கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என முடிவெடுக்கப்படும். சென்னையில் கடைசியாக 2018-ம் ஆண்டு நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அப்போது 57 ஆயிரம் நாய்கள் இருந்தன. தற்போது எங்களின் கணிப்பு படி, 2 லட்சத்துக்கு மேல் தெருநாய்களின் எண்ணிக்கை இருக்கும். விரைவில் விலங்குகள் நல வாரியத்துடன் இணைந்து ஒரு மாதத்தில் அனைத்து வார்டுகளிலும் நாய்கள் கணக்கெடுப்பை தொடங்க இருக்கிறோம்.” என்று அவர் கூறினார்.

The post சென்னையில் அடுத்த ஒரு மாதத்தில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உறுதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Municipal Commissioner ,Radhakrishnan ,J. Radhakrishnan ,Tamil Nadu Animal Welfare ,Marina Beach ,Mayor Commissioner ,
× RELATED சென்னையில் செல்லப்பிராணி வளர்ப்போர்...