சென்னை : கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு மின்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அண்மையில் கோவை சரவணம்பட்டி – துடியலூர் சாலையில் ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் உள்ள விளையாட்டுத் திடலில் விளையாட சென்ற சிறுவர்கள் 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாடு மின்வாரியம் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இதுகுறித்து, மின்வாரியம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
இந்த விடுமுறை காலங்களில் ‘மின் பாதுகாப்பு’ பற்றி பள்ளி சிறார்களுக்கு சொல்லி தருவோம்.
கிரிக்கெட் பந்து எடுக்க மாடிக்கு செல்வது, மரத்தில் ஏறுவது தவிர்க்க வேண்டும். அப்படி செல்ல நேரிட்டால், மேலே மின் கம்பி, மின் கம்பம் அருகே செல்லக்கூடாது.
பூங்காக்களிலோ, பொது இடத்திலோ விளையாடும் போது, மின் கேபிள், வயர், மின் பெட்டி இருந்தால் அருகில் செல்லவோ தொடவோ கூடாது.
விளையாடும்போது பெரியோர் மேற்பார்வை வேண்டும்.
ஆசிரியர்கள் தங்களது பள்ளி குழுக்களில் அறிவுறுத்தலாம்.
TANGEDCO வும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து மின்சார விபத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பெற்றோர், ஆசிரியர், அனைவரும் இணைந்து நமது பிள்ளைகளுக்கு மின்சாரத்தின் ஆபத்துக்களை சொல்லித்தர தருவோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு மின்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மின்வாரியம் வேண்டுகோள்!! appeared first on Dinakaran.