×

சென்னையில் நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மைய பணிக்கான அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி இடங்கள் ஒதுக்கீடு

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மைய பணிக்கான அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி இடங்கள் இன்று காலை ஒதுக்கப்பட்டன. சென்னை மாவட்டத்தில் உள்ள வட சென்னை மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னையில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் நாளை காலை 8.30 மணிக்கு எண்ணப்பட உள்ளன.

இந்த 3 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை 1,384 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீஸார் பாதுகாத்து வருகின்றனர். வட சென்னையில் 280, தென் சென்னையில் 342, மத்திய சென்னையில் 300 என மொத்தம் 922 கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் பணியில் வட சென்னையில் 357 நபர்கள், தென் சென்னையில் 374 நபர்கள், மத்திய சென்னையில் 380 நபர்கள் மற்றும் 322 அலுவலக உதவியாளர்கள் உட்பட மொத்தம் 1,433 பணியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள், மேற்பார்வையாளர்கள் பணிபுரியவுள்ளனர்.

அவர்களுக்கு சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் பணி இடங்களை கணினி குலுக்கல் ஒதுக்கும் பணி ரிப்பன் மாளிகையில், மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே முன்னிலையில் இன்று காலை நடைபெற்றது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, “வெளிப்படையான முறையில், இந்த பணி ஒதுக்கீடு நடைபெற்றுள்ளது. தேர்தல் ஆணைய விதிகளின்படி வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறும். அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

The post சென்னையில் நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மைய பணிக்கான அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி இடங்கள் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,3 Lok Sabha ,Chennai district ,North Chennai ,Lok Sabha ,
× RELATED 2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கு...