×

உன்னத உறவுகள்-அன்றைய நினைவுகள்

நன்றி குங்குமம் தோழி

இயந்திரமயமான இன்றைய காலகட்டத்தில், வீட்டு உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து உணவு அருந்துவது கூட இயலாத ஒரு செயலாக மாறிவிட்டது. ஆடம்பரமான சாப்பாட்டு மேசைகள் வந்த பிறகு, ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது என்பதும் இயலாத நிலைக்கு வந்துவிட்டது. சமைத்த சாப்பாட்டை அம்மா கொண்டுவந்து வைக்க, எல்லோரும் வரிசையாக அமர்ந்து, ஒவ்வொருவருக்கும் அம்மா பரிமாற, அன்றைய நிகழ்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டு முடிக்கும் பொழுது, வயிறு மட்டுமில்லை, மனதும் நிறைந்திருக்கும்.

இதனால் பாசப்பிணைப்பு, நெருக்கம் அதிகமாகும். பிரச்னைகளை மனம் விட்டுப் பேசும் பொழுது, அதற்கான தீர்வுகளும் விவாதிக்கப்படும். நம் பெற்றோர்கள் ஐந்து நட்சத்திர உணவுகளை சமைத்தது கிடையாது. எளிமையான தரமான இயற்கை உணவைத்தான் கொடுத்தார்கள். அதில் அவ்வளவு சந்தோஷமும் ஆரோக்கியமும் கிடைத்தது. ஆனால் இன்று அனைத்து வசதிகள் இருந்தாலும் ‘வேலைபளு’ காரணமாக பலருக்கு சமைக்க நேரமில்லை. சிலருக்கு சாப்பிடக்கூட முடிவதில்லை. பாதி நாட்கள் சாப்பாட்டினை கடையில் ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். இதில் நமக்குக் கிடைப்பது பாசமா, பந்தமா?

பாட்டி நமக்கு செய்து தந்த சுண்டைக்காய் வத்தக் குழம்பும், சுட்ட அப்பளமும் ஆர்டர் செய்யப்படும் உணவுகளுக்கு ஈடாகுமா? அவர்கள் சாப்பாட்டுடன் அன்பும், பாசமும் கலந்து ஊட்டினார்கள். அந்த உணவுகள் எளிதாக காணப்பட்டாலும், அறுசுவை உணவாகவே இருந்தது. அந்த சுவையான அனுபவங்கள் மற்றும் அனுபவித்த சுகபோகங்கள் நம் பிள்ளைகளுக்கு மட்டுமில்லை அவர்களின் பிள்ளைகளுக்கும் கிடைக்காது. உறவு முறை சொல்லி கூப்பிடவும் தெரியாது.

முன்பெல்லாம் திருமணம் ஒருவருக்கு முடிந்தால், கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு, விருந்தினர் வீடுகளில் விருந்து சாப்பிட செல்வது வழக்கமாக இருந்தது. காரணம், திருமணத்தின் பொழுது பல உறவுகளை சந்திப்பதால், அவர்களால், உறவுகளை நினைவில் கொள்வது சிரமம். ‘விருந்து’க்கு போகும் பொழுது, அவர்களுடன் நெருங்கிப் பழகி, உறவுகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்பதற்காகவே இந்த விருந்தோம்பல்கள் கடைபிடிக்கப்பட்டன. இன்று அத்தகைய விருந்து வைக்கும் பழக்கங்கள் காணப்படுவதில்லை. அழைத்தாலும் யாரும் வருவதில்லை. அப்படியே ‘விருந்து’ நடந்தால், ஒரு ஓட்டலில் பலரும் சேர்ந்து கெட் டூ கெதர் என்ற பெயரில் நடைபெறுகிறது. கைமணத்தோடு சேர்ந்த அன்பும் பாசமும் காணாமல் போய்விட்டது.

நிறைய உறுப்பினர்கள் உள்ள குடும்பத்தை ‘மகாமகக் கூட்டம்’ என்பார்கள். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ‘மகாமக’த் திருவிழாவிற்கு அந்த வருடம் முழுதும் ஊரே அமர்க்களப்படும். கல்யாணம் போல் பத்திரிகை வைத்து உறவினர்களை அழைப்பது வழக்கம். ஒரு உறவினருக்கு கடிதம் போட்டால், அவர்களுக்கு வேண்டிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வருவார்கள். சிறிய வீட்டில் கூட சுமார் ஐம்பது பேர் தங்குவார்கள்.

புண்ணிய காலம் என்பதால், ஒவ்வொரு நாளும் விருந்தோம்பல் நடைபெறும். யார் வீட்டிற்கும், எப்பொழுது போனாலும் காபி, டிபன், சாப்பாடு என உபசரிப்பு கிடைக்கும். ‘மகாமக’ குளத்தில் ஒரு முறை குளித்தால், அனைத்துப் பாவங்களும் நீங்கும் என்பார்கள். அதற்காகவே இந்தியாவின் மூலை முடுக்குகளிலிருந்து மக்கள் வருவார்கள். அப்பொழுது கிடைத்த இன்பம், உறவினர்களோடு கொஞ்சிக் குலாவிய காலகட்டம் இன்று யாருக்கும் கிடைப்பதில்லை.

திருவிழா என்றாலே ஊர் முழுதும் கண்காட்சிகள், சர்க்கஸ் போன்ற பொழுது போக்குகள் நடைபெறும். வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு ஊர் முழுக்க சுற்றிக் காண்பிப்பதே தனி கொண்டாட்டமாக இருக்கும். விருந்தினர்கள் திருவிழாவில் அவர்களுக்கு வாங்கும் பொருட்களில் மற்றவர்களுக்கும் வாங்கித் தருவார்கள். தினமும் கிடைப்பதை சேர்த்தாலே ஒரு கடை வைக்கும் அளவுக்கு பொருட்கள் இருக்கும். மகாமக திருவிழா முடிந்ததும், உத்சவ காலம் முடிந்து, ஒவ்வொருவராக ஊருக்குக் கிளம்புவார்கள்.

வருடம் முழுவதும் இப்படி உறவுகளுடன் கூடி வாழ்ந்தால் எவ்வளவு சந்தோஷம். உறவு முறையில்லாதவர்களைக் கூட உறவாக பாதித்த காலம் அது. உறவினர்களிலெல்லாம் ‘சித்தப்பா’, ‘மாமா’, ‘பெரியப்பா’… என்று உச்சரிக்கவே ஆசையாக இருக்கும். அப்பாவிடம் பேச தயங்கும் சில விஷயங்களைக்கூட சித்தப்பாவிடம் சுலபமாக பேசி விடலாம். அப்பாவை விட ரொம்ப சிறியவராக இருப்பதால் நட்புணர்வோடும் சித்தப்பா நடந்து கொள்வார்.

சித்தப்பாதான் சிறந்த நண்பன் என்று ஒருவர் கூற கேட்டிருப்போம். குழந்தைப் பருவத்தில் வீட்டில் மாமா மற்றும் சித்தப்பா இருவரும் இருந்ததால், போட்டி போட்டுக் கொண்டு விளையாடுவார்கள். உறவுகள் சுற்றிலும் இருந்ததால் மட்டுமே விளையாட்டுக்கள் சாத்தியமானது. எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும், உறவுகளின் அரவணைப்பும் பாசப் பிணைப்பை இறுகிப் பிடித்தன.

சித்தி உறவும் அப்படித்தான். இந்த உறவுப் பெயரின் ராசியோ என்னவோ அப்படியொரு அழகான பந்தம் ஏற்படுத்தி விடும். அதிலும் அம்மாவின் தங்கையென்றால் கேட்கவே வேண்டாம். அம்மா பாசம் எப்படியோ, அந்த அளவுக்கு சித்திக்கும் பாசமுண்டு. உறவுகளின் பெயரைச் சொன்னாலே நமக்கு குதூகலம் வந்த காலம் அது. அதுவும் நாம் கூப்பிடும் விதமே நமக்குள்ள பாசப்பிணைப்பைக் காட்டிவிடும்.

இன்று உறவுகள் சுருங்கி, வசதிகள் பெருகியுள்ளன. உத்யோகமும், சம்பாத்யமும் முன்னிலைப்படுத்தப்படுவதால், மற்றைய சுகபோகங்கள் வாழ்க்கையில் இருந்தாலும், எதுவுமே இல்லாதது போன்ற உணர்வுகள் மேலிடுகிறது. பழமையில் ஊறியவர்கள் பலப்பல விஷயங்களைக் கூறினாலும் அவை அர்த்தத்துடன் காணப்பட்டன. உண்மை உறவுகள் என்றுமே நமக்கு உறுதுணைதான் புரியும். பிறர் நம்மை கேலி செய்து பேசினாலும், நம் உறவுகள் நமக்கு உணர்ச்சிபூர்வமாக எடுத்துரைப்பார்கள்.

நம்மைச் சுற்றி, நமக்காக உறவுகள் இருந்துவிட்டால் எதற்கும் பயப்படத் தேவையில்லை. குடும்பம் எப்படி என்றுதான் நம் மூதாதையர்கள் பார்த்தார்களே தவிர, பணம் எவ்வளவு உள்ளது என்று கேட்டதில்லை. நம் பாரம்பரியங்கள் தொடர வேண்டுமானால், நமக்கு நல்ல உறவுகளும் வேண்டும்!

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாசன்

The post உன்னத உறவுகள்-அன்றைய நினைவுகள் appeared first on Dinakaran.

Tags : kumkum doshi ,Dinakaran ,
× RELATED கொழுப்பை குறைப்போம் ஸ்லிம்மாக மாறுவோம்!