×

இண்டியா கூட்டணியின் வெற்றியை கொண்டாட ஆவலுடன் காத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!!

சென்னை : இண்டியா கூட்டணியின் வெற்றியை கொண்டாட ஆவலுடன் காத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, இன்று (ஜூன் 3) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதேபோல் கலைஞரின் 101வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் அவர் புகைப்படத்திற்கு இண்டியா கூட்டணி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா.உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “சோனியா காந்தி அம்மையார், எனது அன்புச் சகோதரர் ராகுல் காந்தி, மரியாதைக்குரிய பரூக் அப்துல்லா, மரியாதைக்குரிய தோழர்கள் சீதாராம் யெச்சூரி, டி. ராஜா உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தலைநகர் டெல்லியில் ஒன்றுகூடி முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவில் இதயப்பூர்வமான மரியாதை செலுத்திய இந்நாளில், அவரை ஒரு மாநிலத் தலைவராக மட்டுமின்றி தேசிய அளவிலான தலைவராகப் போற்றி வணங்குகிறோம்!

கூட்டாட்சியியல் மற்றும் மக்களாட்சிக்காகத் தொடர்ந்து உறுதியாகக் குரல்கொடுத்த தலைவர் கலைஞர் அவர்கள் தேசக் கட்டுமானத்தில் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார். நெருக்கடியான காலங்களில், ஒன்றிய அளவில் நிலையான ஆட்சி தொடர்வதை உறுதிசெய்துள்ளார். பல பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களை முடிவு செய்வதில் முக்கியப் பங்குவகித்து இந்தியாவின் அரசியல் நிலப்பரப்பை பக்குவமாக வடிவமைத்தவர் அவர். அவரது நூற்றாண்டு நிறைவில் பெற்ற புது உத்வேகத்துடன் நாளை (ஜூன்-4) நமது கூட்டணியின் வெற்றியை, இந்திய மக்களுக்கான வெற்றியைக் கொண்டாட எதிர்நோக்கியுள்ளோம்”என்று கூறியுள்ளார்.

The post இண்டியா கூட்டணியின் வெற்றியை கொண்டாட ஆவலுடன் காத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,India Alliance ,K. Stalin ,Chennai ,PTI ,Tamil ,Nadu ,Chennai Marina Beach ,
× RELATED புதுச்சேரியில் இருந்து மெத்தனால்...