சென்னை: மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் இடையிலான ரோப் கார் திட்டப் பணிகள் விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக திகழும் மெரினா கடற்கரை, மக்களை கவரும் வகையில் உள்ளது. காலை, மாலை நேரங்களில் கடற்கரைக்கு தினமும் ஏராளமான மக்கள் பொழுதுபோக்க வருகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்களில் பல ஆயிரம் பேர் இங்கு குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
ஆண்டுக்கு பல லட்சம் பேர் வந்து செல்லக் கூடிய இந்த கடற்கரைக்கு இன்னமும் கூடுதலாக வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதும், உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையான மெரினாவை மேலும் அழகுப்படுத்த வேண்டும் என்பதும் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி `சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மெரினா கடற்கரையில் இலவச இணைய சேவையைக் கொண்டு வர உள்ளதாக மாநகராட்சி அறிவித்தது.
இதற்காக ஏற்கனவே டெலிகாம் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மிக விரைவில் இந்த சேவை நடைமுறைக்கு வர உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மெரினாவில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதில், சென்னையை அழகுபடுத்த எந்தெந்த திட்டங்களை முன்னெடுக்கலாம் என்பது குறித்து மாநகர உறுப்பினர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. அந்த வகையில், பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதில் முக்கியமான ஒன்றாக, மெரினா கடற்கரையை வானத்தில் பறந்தபடி பார்க்கும் வகையில் ரோப் கார் திட்டத்தை முதற்கட்டமாக கொண்டு வரலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. அந்த திட்டத்தின்படி, நேப்பியர் பாலத்தில் இருந்து நம்ம சென்னை செல்பி பாயின்ட் வரை 3 கி.மீ. தூரத்திற்கு ரோப் கார் அமைக்கலாம் என யோசனை முன்மொழியப்பட்டது.
இந்த யோசனையை அதிகாரிகளுக்கு அனுப்பி, அதன் சாத்தியக்கூறுகளை ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரோப் கார் திட்டம் அறிமுகம் செய்த பிறகாக அடையாறு ஆற்றங்கரையை ஒட்டி சென்னையின் பாரம்பரிய கட்டிடங்களை இணைக்கும் வகையில், நேப்பியர் பாலத்தில் இருந்து ராயபுரம் ரயில் நிலையம் வரையில் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த சாத்தியக் கூறுகள் இருப்பதாக முன்மொழியப்பட்டது. ஆனால் அதன் பின்பு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி தெரிவிக்கையில்: தமிழக அரசு ரோப் கார் திட்டத்திற்குக் கொள்கை ரீதியாக அனுமதியைக் கொடுத்துள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் விரிவான சாத்தியக்கூறு அறிக்கைப் பணிகளை தாக்கல் செய்ய இயவில்லை. சாத்தியக்கூறு அறிக்கை இறுதி செய்யப்பட்டவுடன், இத்திட்டத்திற்கு டெண்டர் விடப்படும். பிறகு சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் அனுமதி பெறப்படும்.
மேலும் இத் திட்டத்துக்கு சில நிலங்களைக் கையகப்படுத்த வேண்டி இருப்பதால் இத் திட்டத்தை செயல்படுத்த குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் ஆகும் என்றனர். இந்த திட்டம் குறித்து மேயர் பிரியா கூறுகையில்: முதலில் 3.5 கி.மீ., தூரத்திற்கு ரோப் கார் திட்டம் கொண்டு வரப்படும். இது மற்றொரு போக்குவரத்து முறையாகவும் இருக்கும். வரும் காலங்களில் இது நகரின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை சென்னை மாநகராட்சி தயாரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post மெரினா கடற்கரை- பெசன்ட் நகர் இடையே ரோப் கார் திட்டப்பணிகளை விரைவில் தொடங்க திட்டம் appeared first on Dinakaran.