சேலம்: தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அனைத்து அரசு, உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, பள்ளிகளிலேயே வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையின் கீழ், அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும், இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக, உதவி தொகைகள் மற்றும் ஊக்க தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித்தொகை மற்றும் ஊக்க தொகை, மாணவர்களுக்கு குறித்த நேரத்தில், நேரடியாக வழங்கப்படுவதை உறுதி செய்ய, நேரடி பயனாளர் பரிமாற்றம் (டிபிடி) மூலம் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்திடும் முறை செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு பரிமாற்றம் செய்வதற்கு, ஒவ்வொரு மாணவருக்கும், ஒரு வங்கிக் கணக்கு கட்டாயம் தேவைப்படுகிறது. இதனிடையே, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், அப்பள்ளியிலேயே வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏற்கனவே உள்ள வங்கிக் கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மாணவர்களின் வயது அடிப்படையில், 2 நிலைகளில் வங்கி கணக்கு தொடங்கப்படவுள்ளது. 5 வயதிற்கு மேல் 10 வயது வரையுள்ள மாணவர்களுக்கும், 10 வயதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் என இருநிலைகளில் வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில், இணை கணக்காகவே துவங்கப்படும். இக்கணக்கினை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து பராமரிக்கத்தக்க வகையில் இருக்கும். இதற்கு ஆரம்பத் தொகை ஏதுமில்லாத பூஜ்ஜியத் தொகைக் கணக்காக துவங்கப்படும். அத்துடன் பள்ளிக்கு அருகாமையில் உள்ள அஞ்சல் அலுவலகங்களின் விவரங்கள் மற்றும் வங்கிகளின் விவரங்கள் தயாரித்து வைத்தல் வேண்டும். வங்கி கணக்குகளின் தகவல்களை, பள்ளி அளவில் எமிஸில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வருவாய் மாவட்ட அளவில், ஆதார் புதுப்பித்தல் மற்றும் வங்கிக் கணக்குகளை துவங்கும் பணிகளை அந்தந்த மாவட்ட சிஇஓ.க்கள் ஒருங்கிணைப்பார்கள். அவர்களுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, சிஇஓ.க்கள் எமிஸில் இருந்து விவரங்களை பெற்று, வங்கி கணக்கு துவங்கும் அட்டவணையை, உருவாக்க வேண்டும். வங்கிக் கணக்கு தொடங்குவது தொடர்பாக இடையூறுகள் ஏதேனும் இருப்பின், அதனை மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு உடனுக்குடன் கொண்டு சென்று, நிவர்த்தி செய்ய வேண்டும்.
சிஇஓ.க்கள் தங்களது மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் அஞ்சலக முதன்மை கண்காணிப்பாளர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு, பணி முன்னேற்றம் குறித்து கலந்தாலோசிக்க வேண்டும். பள்ளி தலைமையாசிரியர்களை பொறுத்தவரை, தமது பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும், வங்கி கணக்கு துவக்குதல் மற்றும் ஆதார் விவரம் புதுப்பித்ததை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்கள் இச்சேவையினை பயன்படுத்தி கொள்ள ஏதுவாக, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கு தகவல் தெரிவித்து, முழுமையாக இவ்வசதியினை மாணவர்கள் பெறுவதற்கு வழி வகுக்க வேண்டும். இச்செயல்முறைகளை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரியப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
The post வரும் கல்வியாண்டில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை: பள்ளி கல்வித்துறை ஏற்பாடு appeared first on Dinakaran.