×

ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ; பயணிகளுக்கு மனிதர்களை போலவே பதில் தரும் பாட்கள்: வாடிக்கையாளர் சேவையில் புதுமை

புதுடெல்லி: விமான நிறுவனங்களில் வாடிக்கையாளர் சேவைப் பிரிவை செயற்கை நுண்ணறிவு மொத்தமாக கபளீகரம் செய்துள்ளது. மனிதர்களைப் போலவே பயணிகளின் கேள்விகளுக்கு பாட்கள் பதிலளித்து வருகின்றன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் சாட்பாட்கள் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில் விமான நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவை ஏஐ தொழில்நுட்பம் மொத்தமாக கபளீகரம் செய்துள்ளது. இந்தியாவில் விமான பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான தொழில் துறை ஏற்றத்துடன் இருக்கிறது. இந்தநிலையில், வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் இந்திய ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் முழுக்க முழுக்க சாட்பாட்களை நம்பத் தொடங்கி உள்ளன. ஏர் இந்தியா நிறுவனம் தனது ஏஐ.ஜி மூலம் 1,300 தலைப்புகளில் வாடிக்கையாளர்களின் பலவிதமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வசதிகளை புகுத்தி உள்ளது.

இண்டிகோ நிறுவனம் தனது 6ESKai பாட் மூலம் 1.7 டிரில்லியன் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வசதியை கொண்டுள்ளது. இந்த சேவை 10 வெவ்வேறு மொழிகளிலும் வழங்கப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர் சேவை பிரிவில் 75 சதவீத வேலைகள் பாட்களே செய்கின்றன. ஏர் இந்தியாவில் வெறும் 10 சதவீத வாடிக்கையாளர் சேவைப் பணிகளை மட்டும் மனிதர்கள் செய்கின்றனர். டிக்கெட் புக் செய்வது, டிக்கெட் விவரங்கள், வழங்கப்படும் சேவைகள் என அனைத்து தகவலையும் ஒரு தேர்ந்த நிபுணரைப் போல பாட்கள் வழங்கி வருகின்றன. எழுத்துப்பூர்வமாக மட்டுமின்றி வாய்வழியாக வழங்கும் தகவல்களுக்கும் இந்த பாட்கள் பதிலளிக்கும் படி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கலக்கிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் பணியாளர்களின் பணிச்சுமை குறைந்திருப்பதாக ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் கூறினாலும், இத்துறையில் பலரது வேலைவாய்ப்பை ஏஐ தொழில்நுட்பம் பறித்திருப்பதும் மறுக்க முடியாத உண்மை.

 

The post ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ; பயணிகளுக்கு மனிதர்களை போலவே பதில் தரும் பாட்கள்: வாடிக்கையாளர் சேவையில் புதுமை appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Dinakaran ,
× RELATED கண்ணாடி முகப்பில் பாஸ்டேக் ஸ்டிக்கர்...