×

‘வளர்ச்சி அடைந்த இந்தியா’ உருவாக்க அடுத்து வரும் 25 ஆண்டுகளை நாட்டுக்காக அர்ப்பணிப்போம்: பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: மக்களவை தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, கடந்த மாதம் 30ம் தேதி முதல் கடந்த 1ம் தேதி வரை கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்தார். பின்னர் கடந்த 1ம் தேதி மாலை 4.15 மணிக்கு விமானம் மூலம் டெல்லிக்குபுறப்பட்டார். தனது விமான பயணத்தில் சுமார் 3 மணி நேரம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அமிர்த காலத்தின் முதல் தேர்தலாக இந்த மக்களவை தேர்தல் நடந்துள்ளது. இப்போது என் மனம் பல அனுபவங்களாலும் உணர்ச்சிகளாலும் நிரம்பி உள்ளது. எனக்குள் எல்லையில்லா ஆற்றல் ஓட்டத்தை உணர்கிறேன். கன்னியாகுமரியில் தியான நிலைக்கு சென்றதும், சூடான அரசியல் விவாதங்கள், எதிர் தாக்குதல்கள், குற்றச்சாட்டுகளின் குரல்கள் அனைத்தும் மறைந்து வெற்றிடமாக மாறின. எனக்குள்ளே எதன் மீதும் பற்றில்லாத உணர்வு வளர ஆரம்பித்தது. என் மனம் வெளி உலகத்திலிருந்து முற்றிலும் விலகியது. இந்தியாவின் பிரகாசமான எதிர்காலம், இலக்குகள் பற்றி என் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. குமரியில் உதிக்கும் சூரியன் என் எண்ணங்களுக்குப் புதிய உயரங்களைத் தந்தது. கடலின் பரந்த தன்மை என் எண்ணங்களை விரிவுபடுத்தியது.

கன்னியாகுமரி தேசத்தின் கருத்தியல் சங்கமம். இங்கு விவேகானந்தர் நினைவிடம், திருவள்ளுவரின் பிரமாண்ட சிலை, காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் மணி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். அவர்களின் சிந்தனை ஓட்டங்கள் தேசிய சிந்தனையின் சங்கமமாக இங்கு சங்கமிக்கிறது. இது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பெரும் உத்வேகத்தை உருவாக்குகிறது. இந்தியாவின் ஒற்றுமை உணர்வை சந்தேகிக்கும் எவருக்கும் அழியாத செய்தியை கன்னியாகுமரி தருகிறது. ஒரு கணத்தையும் வீணாக்காமல், பெரிய கடமைகள் மற்றும் பெரிய இலக்குகளை நோக்கி முன்னேற வேண்டும். நாம் புதிய கனவுகளை காண வேண்டும், அவற்றை நிஜமாக்க அந்த கனவுகளை உயிர்ப்பிக்க வேண்டும். இந்தியாவில் நாம் பிறக்க கடவுள் நமக்கு அருளினார் என்பதை ஒவ்வொரு நொடியிலும் பெருமை கொள்ள வேண்டும். தேசத்திற்கு சேவை செய்யவும், தேசத்தின் சிறப்பை நோக்கிய பயணத்தில் நமது பங்கை நிறைவேற்றவும் கடவுள் நம்மை தேர்ந்தெடுத்துள்ளார்.

அடுத்த 50 ஆண்டுகளை தேசத்துக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று 1897ல் சுவாமி விவேகானந்தர் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்புக்கு சரியாக 50 ஆண்டுகளுக்குப் பிறகு, 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. இன்று அதே பொன்னான வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகளை நாட்டுக்காக அர்ப்பணிப்போம். நமது முயற்சிகள் வரும் தலைமுறைகளுக்கும், நூற்றாண்டுகளுக்கும் வலுவான அடித்தளத்தை உருவாக்கி, இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். நாட்டின் ஆற்றலையும், உற்சாகத்தையும் பார்க்கும்போது நமது இலக்கு வெகு தொலைவில் இல்லை என்றே சொல்லலாம். விரைந்து செயல்படுவோம். ஒன்றுபட்டு வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.

 

The post ‘வளர்ச்சி அடைந்த இந்தியா’ உருவாக்க அடுத்து வரும் 25 ஆண்டுகளை நாட்டுக்காக அர்ப்பணிப்போம்: பிரதமர் மோடி அழைப்பு appeared first on Dinakaran.

Tags : India ,PM Modi ,New Delhi ,Lok Sabha election ,Modi ,Vivekananda Mandapam ,Kanyakumari ,
× RELATED இந்தோனேஷிய அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை