×

கருத்து கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் இந்தியா கூட்டணிக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும்: 11 மாநில காங். தலைவர்கள் உறுதி

புதுடெல்லி: கருத்து கணிப்புகளில் வெளியான எண்ணிக்கையை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநில காங்கிரஸ் தலைவர்கள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர். மக்களவை தேர்தலின் கடைசி கட்ட வாக்குபதிவு நேற்று முன்தினம் முடிந்தது. இதன் பின் கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் பாஜ கட்சிக்கு அதிக மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும். பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சி அமைப்பார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பல்வேறு மாநில முதல்வர்கள், காங்கிரஸ் தலைவர்கள்,கட்சியின் சட்டமன்ற குழு தலைவர்களுடன் காணொலி மூலம் நேற்று கலந்துரையாடினார்.

இதில் பேசிய அசாம் காங்கிரஸ் தலைவர் பூபன் போரா,‘‘மாநிலத்தில் உள்ள மொத்தம் 14 தொகுதிகளில் காங்கிரஸ் குறைந்தது 7 தொகுதிகளில் வெற்றி பெறும்.பாஜவில் உள்கட்சி பிரச்னை அதிகம் உள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே உள்ள ஒற்றுமை அதிக சீட்டுகளை பெற்றுதரும்’’ என்றார். பஞ்சாப் பேரவை எதிர்க்கட்சி தலைவர் பிரதாப் சிங் பாவேஜா,‘‘பஞ்சாபில் காங்கிரசுக்கு 9 இடங்கள் கிடைக்கும். ஆம் ஆத்மிக்கு ஒரு சீட்டும்,இதர கட்சிகளுக்கு 3 இடங்களும் கிடைக்கும். இந்தியா கூட்டணிக்கு 10 இடங்கள் கிடைக்கும்’’ என்றார்.இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங்,‘‘2 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. மீதி 2 தொகுதிகளில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இடைதேர்தல் நடக்கும் 6 பேரவை தொகுதிகளிலும் கட்சி வெற்றி பெறும்’’ என்றார்.

கர்நாடக துணை முதல்வர் டி.கே.எஸ்.சிவகுமார், ‘‘மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் கட்சிக்கு வெற்றி கிடைக்கும்’’ என்றார். பீகார் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங்,‘‘ காங்கிரசுக்கு 7 இடங்கள் கிடைக்கும். எதிர்க்கட்சி கூட்டணி 40ல் 20ஐ கைப்பற்றும்’’ என்றார்.ஜார்க்கண்ட் மாநில தலைவர் ராஜேஸ் தாக்குர்,‘‘இந்தியா கூட்டணிக்கு 8 முதல் 10 சீட்டுகள் கிடைக்கும்’’ என்றார்.மகாராஷ்டிரா மாநில தலைவர் நானா படோலே,‘‘ காங்கிரஸ் 16 இடங்களில் வெற்றி பெறும். 48 தொகுதிகளில் இந்த கூட்டணிக்கு 38 முதல் 40 இடங்கள் கிடைக்கும்’’ என்றார். ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் டோட்டசரா,‘‘காங்கிரசுக்கு 13 இடங்கள் கிடைக்கும்’’ என்றார்.குஜராத் மாநில தலைவர் சக்திசிங் கோஹில்,‘‘குஜராத்தில் பல தொகுதிகளில் பாஜவுக்கு கடும் போட்டியை உருவாக்கினோம்.எனவே காங்கிரசுக்கு குறைந்தது 5 இடங்கள் கிடைக்கும்’’ என்றார். அரியானா காங்கிரஸ் தலைவர் உதய்பான்,‘‘ அரியானாவில் உள்ள 10 தொகுதிகளில் 8 இடங்களில் வெற்றி கிட்டும்’’ என்றார். உபி காங்கிரஸ் தலைவர் அஜய்ராய்,‘‘ சமாஜ்வாடியுடன் கூட்டணி அமைத்து 17 இடங்களில் கட்சி போட்டியிட்டது. இதனால் கட்சிக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும்’’ என்றார்.

 

The post கருத்து கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் இந்தியா கூட்டணிக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும்: 11 மாநில காங். தலைவர்கள் உறுதி appeared first on Dinakaran.

Tags : India ,Congress ,New Delhi ,Karnataka ,Maharashtra ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மாணவர்களுக்கு நீதி கோரி நீட்...