×

மகாராஷ்டிராவில் கிராமப்புற பெண்களுக்கு ஏஐ தொழில்நுட்பம் உதவியுடன் மார்பக புற்றுநோய் பரிசோதனை

சோலாப்பூர்: மகாராஷ்டிராவில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கிராமப்புற பெண்களுக்கு இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை நடத்தப்படுகிறது. உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் குறிப்பாக பெண்களை அதிகம் பாதிக்க கூடிய, உயிரிழப்பை ஏற்படுத்த கூடிய புற்றுநோய் வகைகளில் மார்பக புற்றுநோயும் ஒன்று. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் கிராமப்புற பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சியாக மருத்துவ ஊர்திகள் மூலம் இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யப்படுகிறது. சோலாப்பூர் ஜில்லா பரிஷத் தலைமை நிர்வாக அதிகாரி மனிஷா அவ்ஹாலே பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது, “கிராமப்புறங்களை சேர்ந்த பெரும்பாலான பெண்கள் இதுபோன்ற பரிசோதனைகளுக்கு செல்ல தயங்குகின்றனர். எனவே அவர்களை தேடி சென்று சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து மார்பக புற்றுநோயை கண்டறிய, பரிசோதிக்க பிரத்யேக மருத்துவ ஊர்தி தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஊர்தியில் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு மூலம் மார்பக புற்றுநோயை கண்டறியும் கையடக்க பரிசோனை கருவிகளை பொருத்தி உள்ளோம். இதன் மூலம் சோலாப்பூர் மாவட்டத்தின் நகர்ப்புற, கிராமப்புற பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சோதனை செய்யப்படுகிறது. இந்த மாவட்டத்தில் 7 லட்சம் பெண்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த மார்ச் மாதம் திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை 1,000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று, சுமார் 5,000 பெண்களை பரிசோதித்துள்ளோம். அவர்களில் 64 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக சந்கேத்தின் பேரில் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்துக்காக நோயை கண்டறிவது முதல் சிகிச்சை வரை ஒரு பெண்ணுக்கு ரூ.20,000 வீதம் ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. பெண்களுக்கு சரியான நேரத்தில் மார்பக புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது, விழிப்புணர்வை ஏற்படுத்துவதே திட்டத்தின் நோக்கம்” என்று தெரிவித்தார்.

 

The post மகாராஷ்டிராவில் கிராமப்புற பெண்களுக்கு ஏஐ தொழில்நுட்பம் உதவியுடன் மார்பக புற்றுநோய் பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Solapur ,Dinakaran ,
× RELATED மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில்...