×

பூனைக்குட்டி காணாமல் போனதால் தாத்தாவை சரமாரியாக வெட்டிய பேரன்: கேரளாவில் பயங்கரம்

திருவனந்தபுரம்: திருச்சூர் அருகே வீட்டில் வளர்த்து வந்த பூனைக்குட்டி காணாமல் போனது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தாத்தாவை சரமாரியாக வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள இரிஞ்சாலக்குடா பகுதியை சேர்ந்தவர் கேசவன் (79). இவரது பேரன் குமார் (29). போதைப் பொருளுக்கு அடிமையான குமார் திடீர் திடீரென கோபப்படுவாராம். குமார் தனது வீட்டில் ஒரு பூனைக்குட்டியை வளர்த்து வருகிறார்.
மிகவும் பாசமாக வளர்த்த அந்த பூனை நேற்று காலையில் திடீரென மாயமானது. இது குறித்து குமார் தன்னுடைய தாத்தா கேசவனிடம் கேட்டுள்ளார். ஆனால் பூனைக்குட்டி காணாமல் போனது குறித்து தனக்கு தெரியாது என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த குமார் விறுவிறுவென வீட்டுக்குள் சென்று அங்கிருந்த அரிவாளை எடுத்துவந்து தாத்தாவை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு தலை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த கேசவன் அலறினார். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கேசவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவலறிந்த இரிஞ்சாலக்குடா போலீசார் விரைந்து சென்று குமாரை கைது செய்தனர். இதற்கிடையே கேசவனின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

The post பூனைக்குட்டி காணாமல் போனதால் தாத்தாவை சரமாரியாக வெட்டிய பேரன்: கேரளாவில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Thrissur ,Kesavan ,Irinjalakuda ,Thrissur, Kerala ,
× RELATED கேரளாவில் திடீர் நில அதிர்வு