×

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அருணாச்சலில் மீண்டும் பாஜ ஆட்சி: சிக்கிமில் ஆளும் கட்சி அபார வெற்றி

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் அருணாச்சலில் பாஜ மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது. சிக்கிமில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்சா கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிமில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல்கட்ட மக்களவை தேர்தலின் போதே, சட்டப்பேரவைக்கான தேர்தலும் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது.

அருணாச்சல் சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஜூன் 2ம் தேதியுடன் (நேற்று) முடிவடைவதால், மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதிக்கு பதிலாக முன்கூட்டியே ஜூன் 2ம் தேதி அருணாச்சல் மற்றும் சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, இரு மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நேற்று நடந்தது. அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன.

இதில், வாக்குப்பதிவுக்கு முன்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் பலர் வாபஸ் பெற்றனர். இதனால், முதல்வர் பெமா காண்டு உட்பட 10 பாஜ வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றனர். இங்கு ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவை என்ற நிலையில், 50 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், பாஜ 36 தொகுதிகளில் வென்று மொத்தம் 46 தொகுதிகளுடன் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது.

இங்கு தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 5 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களிலும், அருணாச்சல் மக்கள் கட்சி (பிபிஏ) 2 இடத்திலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 3 தொகுதியிலும் வெற்றி பெற்றன. இந்த வெற்றியை தொடர்ந்து கட்சி அலுவலகங்களில் பாஜ தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். இதே போல, 32 தொகுதிகள் கொண்ட சிக்கிம் மாநிலத்தில் ஆளும் பிராந்திய கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்சா (எஸ்கேஎம்) 31 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

முதல்வர் பிரேம் சிங் தமாங் 2 தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். அவரது மனைவி கிருஷ்ணா குமாரி ராய், நம்சி-சிங்கிதாங் தொகுதியில் 5,302 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முக்கிய எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்டிஎப்) கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான பவண் சாம்லிங் போட்டியிட்ட 2 தொகுதியிலும் தோல்வி அடைந்தார்.

இந்தியாவிலேயே அதிக ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்த பெருமை பெற்ற சாம்லிங் முதல் முறையாக சட்டப்பேரவைக்கு தகுதி பெறாததால் அவரது அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. எஸ்டிஎப் கட்சியிலிருந்து விலகி எஸ்கேஎம் கட்சியை தொடங்கிய பிரேம் சிங் தமாங், கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில், எஸ்டிஎப் கட்சியின் 25 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு கட்டியவர்.

தற்போது 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றி பிரேம் சிங் தமாங் சாதித்துள்ளார். அதே சமயம், இங்கு போட்டியிட்ட தேசிய கட்சிகளான பாஜ, காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. கடந்த முறை பாஜவுக்கு 12 எம்எல்ஏக்கள் இருந்தனர். மாநில தலைவரான தில்லி ராம் தபாவும் தோல்வி அடைந்தார். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரு மாநில சட்டப்பேரவையையும் கலைத்து அம்மாநில ஆளுநர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

* பிரதமர் மோடி வாழ்த்து
சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அருணாச்சல் மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங்கிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பதிவில், ‘‘அருணாச்சலுக்கு நன்றி! வளர்ச்சி அரசியலுக்கு வாக்களித்து, பாஜ மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வெற்றி தேடித்தந்த அருணாச்சல் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் கட்சி, மாநிலத்தின் வளர்ச்சிக்காக இன்னும் வீரியத்துடன் உழைக்கும். பாஜ தொண்டர்களின் கடின உழைப்பிற்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்’’ என்றார். மற்றொரு பதிவில் அவர், ‘‘சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் பாஜவுக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிக்காக முயற்சித்த தொண்டர்களின் உழைப்பையும் பாராட்டுகிறேன்.

சிக்கமின் வளர்ச்சிக்கும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதிலும் பாஜ கட்சி எப்போதும் முன்நிற்கும். தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் பிரேம் சிங் தமாங்கிற்கு வாழ்த்துக்குள். வரும் நாட்களில் சிக்கிம் வளர்ச்சிக்காக மாநில அரசுடன் இணைந்து பணியாற்றுவதை ஆர்முடன் எதிர்பார்த்துள்ளேன்’’ என்றார்.

* பூட்டியா தோல்வி
இந்திய கால்பந்து அணியின் பிரபலமான கேப்டனாக இருந்த பூட்டியா சமீபத்தில் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், தனது ஹம்ரோ சிக்கிம் கட்சியை எதிர்க்கட்சியான எஸ்டிஎப் உடன் இணைத்தார். எஸ்டிஎப் கட்சியில் பூட்டியாவுக்கு துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. அக்கட்சி சார்பில் நம்சி மாவட்டத்தில் உள்ள பர்பங்க் தொகுதியில் பூட்டியா தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அவர் 4,012 வாக்குகள் மட்டுமே பெற்று எஸ்கேஎம் கட்சியின் ரிக்சல் டோர்ஜியிடம் (8,358 வாக்கு) தோல்வி அடைந்தார்.

228 வாக்குகளில்
தோற்ற அமைச்சர்
அருணாச்சல் மாநிலத்தின் கல்வி அமைச்சராக பதவி வகித்த தபா டிதிர் தனது யசுலி தொகுதியில் மீண்டும் இம்முறை போட்டியிட்டார். அவரை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் சார்பில் அனுபவமில்லாத டோகோ ததுங் களமிறக்கப்பட்டார். இதனால் அமைச்சர் தபா எளிதாக வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 228 வாக்குகள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

The post சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அருணாச்சலில் மீண்டும் பாஜ ஆட்சி: சிக்கிமில் ஆளும் கட்சி அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Baja ,Arunachal ,Sikkim ruling party ,New Delhi ,Arunachal Pradesh ,Sikkim ,Sikkim Kranthigari Morsa ,Sikkim party ,Dinakaran ,
× RELATED சட்டசபை தேர்தல் முடிவுகள்;...