×

மூதாட்டியை பலாத்காரம் செய்த ‘பரோல்’ குற்றவாளி சுட்டுக் கொலை: உத்தரபிரதேச போலீஸ் அதிரடி

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மனோஜ் என்கிற உத்தம் என்பவர், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து துப்பாக்கி முனையில் அவர்களை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மனோஜின் தலைக்கு ரூ.50 ஆயிரம் வெகுமதி அறிவித்து போலீசார் தேடி வந்தனர். மதுராவில் மனோஜ் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்த விரைந்து சென்ற போலீசார், அங்கு பதுங்கியிருந்த அவனை கைது செய்ய முயன்றனர்.

அப்போது தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு போலீசாரை மனோஜ் சரமாரியாக சுட ஆரம்பித்தார். தற்காப்புக்காக போலீசார் பதிலடி துப்பாக்கிச் சூடு நடத்தியதில், மனோஜின் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மனோஜிடம் இருந்த ஒரு நாட்டு துப்பாக்கி, 8 துப்பாக்கி தோட்டாக்கள், பைக் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மனோஜ் தப்புவதற்கு உதவியாக இருந்த போலீஸ் ஏட்டு 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மனோஜ், கடந்த 15ம் தேதி சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார். கடந்த 25ம் தேதி, மஹாவன் காவல் நிலையப் பகுதியில், மூதாட்டிக்கு லிப்ட் தருவதாகக் கூறி, பைக்கில் ஏற்றிச் சென்றார். பின்னர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அவரிடம் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றார். மனோஜ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, பலாத்காரம் உட்பட 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தலைமறைவாக இருந்த மனோஜை யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். குற்றவாளி தப்புவதற்கு உதவிய ஏட்டுகள் ஆனந்த் பிரதாப், நேபால் சிங் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்’ என்றனர்.

The post மூதாட்டியை பலாத்காரம் செய்த ‘பரோல்’ குற்றவாளி சுட்டுக் கொலை: உத்தரபிரதேச போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Lucknow ,Manoj ,Uttam ,Dinakaran ,
× RELATED வாக்குவாதம் செய்ததை தடுத்ததால் விமான...