×

பீகாரில் வாக்குச்சாவடிக்கு சென்ற பாஜக வேட்பாளர் மீது கல்வீச்சு: துப்பாக்கி சூட்டில் தொண்டர் படுகாயம்

பாட்னா: பீகாரில் வாக்குச் சாவடிக்கு சென்ற பாஜக வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய நிலையில், அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்தார். பீகாரில் நேற்று கடைசி கட்டமாக 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையில், பாடலிபுத்ரா பாஜக சிட்டிங் எம்பியும், வேட்பாளருமான ராம்கிரிபால் யாதவ், தனது ஆதரவாளர்களுடன் மசவுரி பகுதிக்கு சென்றார். அவரது வாகனத்திற்கு முன்னும் பின்னும் கான்வாய் வாகனங்கள் சென்றன. அப்போது கான்வாய் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.

அப்போது வேட்பாளரின் ஆதரவாளர்கள் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும் துப்பாக்கிச் சூடு நடத்தியது யார், எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாஜக வேட்பாளர் ராம்கிரிபால் யாதவ் கூறுகையில், ‘பெண் எம்எல்ஏ ஒருவர் சட்ட விரோதமாக வாக்குச்சாவடிக்குள் நுழைந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தினேரி கிராமத்திற்கு சென்றோம்.

பின்ஜாடி கிராமத்தை சேர்ந்த 20 முதல் 25 பேர் எனது காரையும், கான்வாய் வாகனங்களையும் சுற்றி வளைத்து தாக்கினர். அவர்கள் செங்கல், கற்கள் மட்டுமின்றி துப்பாக்கியாலும் சுட்டனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த எங்களது கட்சியின் ஆதரவாளர் ஒருவர் என்னைக் காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் துப்பாக்கி முனையில் தாக்கப்பட்டார். தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது எனக்குத் தெரியாது’ என்றார். மேற்கண்ட துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பீகாரில் வாக்குச்சாவடிக்கு சென்ற பாஜக வேட்பாளர் மீது கல்வீச்சு: துப்பாக்கி சூட்டில் தொண்டர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Bihar ,Patna ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு வினாத்தாள் கசிவு...