×

சட்டசபை தேர்தல் முடிவுகள்; அருணாச்சலில் பாஜ, சிக்கிமில் எஸ்கேஎம் ஆட்சி: சிக்கிமில் பாஜக, காங்கிரசுக்கு ஒரு இடம் கூட இல்லை

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. அருணாச்சலில் ஆளுங்கட்சியான பாஜகவும், சிக்கிமில் ஆளுங்கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) கட்சியும் மீண்டும் ஆட்சியை பிடித்தன. அதேநேரம் சிக்கிமில் பாஜக, காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு, ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்திருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 4ம் தேதி (நாளை மறுநாள்) நடைபெறவிருக்கிறது.

அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப் பேரவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப். 19ல் நடைபெற்றது. ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்த கட்டங்களில் நடந்தது. சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால், முன்கூட்டியே இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆந்திரா, ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள், மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளை மறுநாள் நடைபெறவிருக்கிறது. சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், அந்த மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) கட்சி ஆட்சி செய்கிறது. எதிர்க்கட்சியாக சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி உள்ளது. பாஜக, காங்கிரஸ், என்பிபி உட்பட பல கட்சிகள் களத்தில் உள்ளன. அதேபோல் அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் முதல்வர் பீமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டனர்.

அருணாச்சல் பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்டது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 34 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 29 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், அருணாச்சல் மக்கள் கட்சி (பிபிஏ) 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அம்மாநில முதல்வர் பீமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனால் மீதமுள்ள 50 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

சிக்கிமில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா சார்பில் மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங், சோரெங்-சாகுங், ரெனோக் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா மற்றும் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகியவை அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளன. சிக்கிமில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 31 இடங்களில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி முன்னிலையில் உள்ளதால், அதன் தலைவர் பிரேம்சிங் மீண்டும் முதல்வர் ஆகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை. எஸ்டிஎப் கட்சி ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் காலை 11 மணி நிலவரப்படி பாஜக 33 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஏற்கனவே 10 இடங்களில் போட்டியின்றி தேர்வாகி உள்ளதால், முழு பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. என்பிபி கட்சி ஆறு இடங்களிலும், மற்றவை ஒன்பது இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ஆனால் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை. எனவே, பீமா காண்டு மீண்டும் முதல்வர் ஆவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கண்ட இரு மாநில தேர்தல் முன்னிலையை பார்க்கும் போது ஆளுங்கட்சிகள் மீண்டும் ஆட்சியமைக்கின்றன. அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜகவும், சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும் மீண்டும் ஆட்சி அமைப்பதால் அக்கட்சிகளுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

The post சட்டசபை தேர்தல் முடிவுகள்; அருணாச்சலில் பாஜ, சிக்கிமில் எஸ்கேஎம் ஆட்சி: சிக்கிமில் பாஜக, காங்கிரசுக்கு ஒரு இடம் கூட இல்லை appeared first on Dinakaran.

Tags : BAJA ,ARUNACHAL ,SKM ,SIKKIM ,BJP ,CONGRESS ,New Delhi ,Arunachal Pradesh ,Sikkim Assembly ,Sikkim Kranthigari Morcha ,
× RELATED சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்...