×

குமரியில் தேசிய நெடுஞ்சாலைகளில் புழுதி புயல்: வாகன ஓட்டிகள் திணறல்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளும் சீரமைக்கப்படாமல் கிடப்பதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். குமரி மாவட்டத்தில் காவல்கிணறு முதல் பார்வதிபுரம், கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலைகளில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பெரும்பாலான சரக்கு வாகனங்களும் இந்த சாலைகளில் பயணிக்கின்றன. நாள் தோறும் சாலை வழி மார்க்கமாக, ஆயிரக்கணக்கானவர்கள் கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையே இந்த சாலையில் தான் செல்கிறார்கள். மிக முக்கியமான இந்த தேசிய நெடுஞ்சாலைகள் தற்போது கிராமப்புற சாலைகளை விட மோசமாக கிடக்கின்றன. ஆரல்வாய்மொழியில் தொடங்கி களியக்காவிளை வரை உள்ள பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள குண்டும், குழிகளில் விழுந்து வாகனங்கள் சிக்கி திணறுகின்றன.நாகர்கோவில், சுங்கான்கடை, தோட்டியோடு, வில்லுக்குறி, தக்கலை பகுதிகளில் சாலைகள் நொறுங்கிய புழுதி பறக்கும் நிலை உள்ளது. கனரக வாகனங்கள் செல்லும் போது பறக்கும் புழுதி புயலால் பைக் ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். எதிரே வரும் வாகனம் தெரியாத அளவுக்கு புழுதி பறப்பதால், விபத்துக்கள் நடக்கும் அபாயம் உள்ளது. புறநகர் பகுதிகளில் மட்டுமல்ல, நாகர்கோவில் நகருக்குள் உள்ள தேசிய நெடுஞ்சாலை சொல்ல முடியாத அளவுக்கு மிக கேவலமான நிலையில் உள்ளது.குறிப்பாக நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை சந்திப்பில் இருந்து காசி விஸ்வநாதர் கோயில் சந்திப்பு, வெட்டூணிமடம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில்  நொறுங்கி கிடக்கும் சாலையில் பறக்கும் புழுதி புயலால், ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் நிலை உள்ளது.  புழுதி புயலால் ஏற்படும் மூச்சு திணறலால், பைக் மற்றும் பஸ்கள், கார்களில் செல்லும் குழந்தைகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள கடைகளில் உணவு பொருட்கள் மற்றும் பொருட்களில் புழுதி படிந்துள்ளது. அதை பொதுமக்கள் வாங்கி உட்கொள்ளும் நிலையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், ஒன்றிய அரசை வலியுறுத்தி உள்ளார். ஒன்றிய அமைச்சரையும் நேரடியாக சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் மோசமான நிலையில் தொடர்வது மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி உள்ளது. விபத்துக்கள், உயிர் பலிகள் என்ற அபாயம் உள்ளதால், உடனடியாக தேசிய நெடுஞ்சாலைகளில் குண்டு, குழிகளையாவது சீரமைத்து, புழுதி புயல் பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது….

The post குமரியில் தேசிய நெடுஞ்சாலைகளில் புழுதி புயல்: வாகன ஓட்டிகள் திணறல் appeared first on Dinakaran.

Tags : Kumari ,Nagercoil ,Kumari district ,Kavalkinaru ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் மாலை நேர ரோந்தில் போலீசார் ஈடுபடுவார்களா?