×

சிக்கிம், அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் பதிவிக்காலம் இன்றுடன் முடிவதால் வாக்குகளை எண்ணும் பணி தொடக்கம்

காங்டாக்: சிக்கிம், அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இரு மாநில பேரவையின் பதிவிக்காலம் இன்றுடன் முடிவதால் முன்கூட்டியே எண்ணிக்கை நடைபெறுகிறது. மக்களவைக்கு பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட உள்ளது. காலை 6 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன

18-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (04.06.2024) எண்ணப்படுகிறது. அதே நாளில் 4 மாநில சட்டசபை தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிமில் மட்டும் ஜூன் 2-ம் தேதியான இன்று சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேர்தல் கமிஷன் பின்னர் அறிவித்தது.

சிக்கிம், அருணாச்சலப் பிரதேச, ஆகிய 2 மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலமும் ஜூன் 2-ம் (இன்று)தேதியுடன் நிறைவு பெறுவதன்.காரணமாக இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஓரிரு நாள்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை இல்லாத சூழ்நிலை ஏற்படலாம் என்பதை தவிர்க்கவே வாக்கு எண்ணிக்கை தேதியை தேர்தல் ஆணையம் மாற்றியமைத்தது.

அதன்படி 2 மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவருகிறது. அருணாசலபிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெறுகிறது. அங்குள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும், 2 மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் 82 சதவீத வாக்குகள் பதிவாகின.சட்டசபை தேர்தலை பொறுத்த வரையில் பா.ஜனதா 60 தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே தனது வேட்பாளரை நிறுத்தியது.

இது தவிர, தேசிய மக்கள் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட சில முக்கிய கட்சிகளும் களத்தில் உள்ளன. இந்த சூழலில் முதலமைச்சர் பெமா காண்டு உள்பட 10 பா.ஜனதா வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். இதனால் எஞ்சியுள்ள 50 தொகுதிகளில் மட்டும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த 50 தொகுதிகளில் 133 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள 24 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் காலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதே போல் சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 6 மணிக்கு தொடங்கியது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள 6 இடங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சிக்கிமில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி 32 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதிக்கு ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவானது. சிக்கிமில் உள்ள ஒரு மக்களவை தொகுதியிலும், அருணாசல பிரதேசத்தில் உள்ள 2 மக்களவை தொகுதிகளிலும் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

The post சிக்கிம், அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் பதிவிக்காலம் இன்றுடன் முடிவதால் வாக்குகளை எண்ணும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Sikkim ,Arunachal Pradesh Legislature ,Gangtok ,Sikkim, Arunachal Pradesh Legislative Election ,Arunachal Pradesh ,
× RELATED முதல்வர் மனைவி எம்எல்ஏ பதவி திடீர் ராஜினாமா: சிக்கிம் அரசியலில் பரபரப்பு