×

வாக்கு எண்ணும் மைய அலுவலர்களுக்கு பயிற்சி: திருவள்ளூர் கோட்டாட்சியர் பங்கேற்பு

திருவள்ளூர், ஜூன் 2: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின் பேரில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற 18வது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் முதல் தொகுதியான திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், மாதவரம், பூந்தமல்லி, ஆவடி, ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்கு பெட்டி எந்திரங்கள் அந்தந்த மண்டல அலுவலர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்களை பெட்டியில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன.
பிறகு வாக்குச்சாவடி மையங்களில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பெருமாள்பட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு 24 மணி நேரமும் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு காமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அலுவலர்கள் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த பயிற்சி கூட்டம் பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ஏ.கற்பகம் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் ரா.கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து வருவாய் கோட்டாட்சியர் ஏ.கற்பகம் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கினார். இதில் பூந்தமல்லி மண்டல துணை வட்டாட்சியர் அருள்குமார், வானகரம் மண்டல துணை வட்டாட்சியர் பெருமாள், தலைமை இடத்து துணை வட்டாட்சியர் யுகேந்தர், தேர்தல் துணை வட்டாட்சியர் விஜய் ஆனந்த் உட்பட வாக்கு எண்ணிக்கையின் போது பங்கேற்கும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

The post வாக்கு எண்ணும் மைய அலுவலர்களுக்கு பயிற்சி: திருவள்ளூர் கோட்டாட்சியர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Kotatshiyar ,Thiruvallur ,Election Commission of India ,Tamil Nadu ,18th parliamentary election ,Kummidipoondi ,Parliamentary Constituency ,
× RELATED தமிழகத்திலேயே அதிக வாக்கு...