×

கல்வி கட்டணத்தை முறைகேடு செய்ததாக சவீதா கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து போராடிய 14 மாணவர்கள் சஸ்பெண்ட்: போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு

பெரும்புதூர், ஜூன் 2: கல்விக் கட்டண முறைகேடு விவகாரம் தொடர்பாக, சவீதா கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய 14 மாணவர்கள் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் முடிவு செய்துள்ளனர். திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி பகுதியில் உள்ள சவீதா பல்கலைக்கழகத்தில் பொறியியல், சட்டம், மருத்துவம், பல் மருத்துவம், உள்ளிட்ட ஏராளமான கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் எராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கல்லூரியில் எம்பிஏ முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கல்வி கட்டணமாக தலா ₹3 லட்சம் செலுத்தியுள்ளனர். கல்லூரி நிர்வாகம் தெரிவித்த வங்கிக் கணக்கில் பணமாகவும், காசோலையாகவும், ஆன்லைனிலும் பணத்தை செலுத்தினர். இந்நிலையில், கல்வி கட்டணத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் ₹50 ஆயிரம் முதல் ₹2 லட்சம் வரை நிலுவை இருப்பதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், ஏற்கனவே, கட்டணம் செலுத்திய மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, கல்வி கட்டண தொகையை செலுத்திய போது பணியில் இருந்தவர்கள், கட்டணம் வசூலித்தவர்கள் கல்லூரியை விட்டு நின்று விட்டதாக தெரிவித்துள்ளனர்.

கல்லூரி நிர்வாகம் கூறிய வங்கி கணக்கில் பணம் செலுத்தியவர்களுக்கு, அதற்கான ரசீதும் வழங்கவில்லை. இந்நிலையில், கட்டணம் வசூலித்தவர்களை கண்டுபிடித்து, அவர்களிடம் இருந்து பணத்தை பெற்று செலுத்துமாறு பொறுப்பில்லாமல் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், நிலுவையில் உள்ள தொகையை செலுத்திய பிறகு தான் வகுப்புகள் நடைபெறும். தேர்வு எழுத முடியும் என்று கல்லூரி நிர்வாகம் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை வசூலித்தவர்கள் கல்லூரியில் உயர் பொறுப்பில் இருந்தவர்கள். அவர்கள் பணம் கையாடல் செய்து விட்டதாக தெரிகிறது. அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் மாணவர்களை மீண்டும் கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த எம்பிஏ மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திருவேற்காடு போலீசார், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத்தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட எம்பிஏ மாணவர்கள் 14 பேரை, 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுபற்றி அறிந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘கல்லூரியின் டீன் மற்றும் மாணவர் சேர்க்கை தலைமை அதிகாரி ஆகியோர் மாணவர்களிடம் வசூலித்த பல கோடி ரூபாய் கல்வி கட்டணத்தை கையாடல் செய்து விட்டு தலைமறைவாகிவிட்டனர். கல்லூரியின் நிர்வாகம் தெரிவித்த வங்கிக் கணக்கில் கல்வி கட்டணத்தை செலுத்தி உள்ளோம். பணத்தை கையாடல் செய்து விட்டு தலைமறைவாகி விட்டதால், கல்வி கட்டணத்தை மீண்டும் செலுத்துமாறு கல்லூரி நிர்வாகம் வற்புறுத்துகிறது. நாங்கள் ஏற்கனவே கட்டிய பணத்தை மீண்டும் கல்லூரி நிர்வாகம் கட்டச் சொல்வது எந்த விதத்தில் நியாயமாகும்.

பணம் கையாடல் செய்த இருவர் தலைமறைவானது குறித்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 14 பேரை கல்லூரி நிர்வாகம் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் போர்டில் அதற்கான அறிவிப்பை ஒட்டி உள்ளது. மேலும் பல மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சஸ்பெண்ட் உத்தரவு மாணவர்களிடையே மேலும் ஆத்திரத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் மாணவர்கள் தங்களது போராட்டத்தை பெரிய அளவில் எடுத்துச் செல்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்,’’ என்றனர்.

இணையதளம் முடக்கம்
போராட்டம் தொடர்பாக, பல்வேறு மாணவ அமைப்புகள், அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மாணவர்களின் போராட்டம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதனால், தங்களது பெயர் கெட்டுவிடும் என நினைத்த கல்லூரி நிர்வாகம், மாணவர்கள் பயன்படுத்தி வந்த இணையதளத்தையும் தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது.

The post கல்வி கட்டணத்தை முறைகேடு செய்ததாக சவீதா கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து போராடிய 14 மாணவர்கள் சஸ்பெண்ட்: போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு appeared first on Dinakaran.

Tags : Saveeda College ,Savita College ,Dinakaran ,
× RELATED கல்வி கட்டணத்தை கையாடல் செய்ததாக...