×

இடைக்கால ஜாமீனை நீட்டிக்க மறுப்பு கெஜ்ரிவால் இன்று மீண்டும் சிறை செல்கிறார்

புதுடெல்லி: இடைக்கால ஜாமீனை நீட்டிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டதால் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று மீண்டும் சிறை செல்கிறார். டெல்லி புதிய மதுபானக் கொள்கை தொடர்பாக கடந்த மார்ச் 21ம் தேதி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் பிரசாரத்திற்காக ஜூன்1ம் தேதி வரையில் இடைக்கால ஜாமீன் வழங்கி கடந்த 10ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் படி இன்று அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணை அமைப்பின் மூலம் திகார் சிறையில் சரணடைய உள்ளார்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் படி முதல்வர் கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தனித்தனியாக இரண்டு மனுக்களை கடந்த 29ம் தேதி தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நேற்று இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் தீர்ப்பை ஒத்திவைப்பதாகவும், ஜூன் 5ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர்,\\” உடல்நிலை பரிசோதனைக்காக இடைக்கால ஜாமீன் நீட்டிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விவகாரத்தில் இன்றைய தினம் (நேற்று) ஏதேனும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த மனு பயனற்றதாக ஆகிவிடும். அதேப்போன்று நாளை (இன்று) அரவிந்த் கெஜ்ரிவால் கட்டாயம் சரணடைய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.

ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, இந்த வழக்கு விசாரணையின் போது வைக்கப்பட்ட வாதங்களின் போது இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை என்று நீங்கள் தான் தெரிவித்தீர்கள். அதனால் அதில் எந்தவித உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது’ என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் வரும் 5ம் தேதி தான் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று மீண்டும் தெரிவித்தார். இதில் விசாரணை நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் படி டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணை அமைப்பின் மூலம் இன்று திகார் சிறையில் சரணடைய வேண்டும் என்பது உறுதியாகி விட்டது.

The post இடைக்கால ஜாமீனை நீட்டிக்க மறுப்பு கெஜ்ரிவால் இன்று மீண்டும் சிறை செல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,New Delhi ,Delhi ,Chief Minister ,
× RELATED ஆம்ஆத்மி கட்சிக்காக கெஜ்ரிவால் ரூ.100...