×

பங்குச்சந்தை வர்த்தகம் எனக்கூறி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.9 கோடி மோசடி: மக்களே உஷாரா இருங்க

நொய்டா: பங்கு வர்த்தகம் செய்வதற்கான வாட்ஸ் அப் ஆலோசனைக் குழுவில் இணைந்த நொய்டா தொழிலதிபரிடம் ரூ.9 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆலோசனை வழங்குவதாக பல வாட்ஸ் அப் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய வாட்ஸ் அப் குழுக்கள் யாருடைய செல்போன் நம்பரை வேண்டுமானாலும் குழுவில் தாமாக இணைத்துக் கொள்வார்கள். அதுபோன்ற ஒரு பங்கு வர்த்தக வாட்ஸ்அப் குழுவில், நொய்டா செக்டார் 40ல் வசிக்கும் ரஜத் போத்ரா என்ற தொழிலதிபருக்கு கடந்த மே 1ம் தேதி இணைக்கப்பட்டுள்ளார். அதில் தரப்பட்ட ஆலோசனைகள் படி ரஜத் போத்ரா பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார். அதில் ஓரளவுக்கு லாபம் கிடைத்ததால் நம்பிக்கை ஏற்பட்டு, வாட்ஸ் அப் குழு மூலமாக கடந்த மாதம் 27ம் தேதி ரூ.9.09 கோடியை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளார். உடனே வாட்ஸ் அப் குழுவிலிருந்து ரஜத் வெளியேற்றப்பட்டுள்ளார். அப்போதுதான் அது ஒரு மோசடி குழு என்பதை அறிந்துள்ளார்.

இது தொடர்பாக, சைபர் கிரைம் போலீசில் ரஜத் புகாரளித்துள்ளார். அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.1.62 கோடி வர்த்தகத்தை மட்டும் போலீசார் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். மீதமுள்ள பணம் சென்னை, அசாம், புவனேஸ்வர், அரியானா, ராஜஸ்தான் என பல மாநிலங்களில் உள்ள வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சைபர் மோசடியில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க தனிப்பட்டை அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்து விட்டதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டால் உடனடியாக மத்திய ஹெல்ப்லைன் 1930 அல்லது அவசர எண் 112 அல்லது உள்ளூர் காவல் நிலையத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவை தொடர்பு கொள்ள போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

The post பங்குச்சந்தை வர்த்தகம் எனக்கூறி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.9 கோடி மோசடி: மக்களே உஷாரா இருங்க appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,NOIDA ,Dinakaran ,
× RELATED மதுரையில் கள்ளச்சாராயம் விற்பனை...