×

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.70.50 குறைப்பு: சென்னையில் ரூ.1,840.50 ஆக நிர்ணயம்

சேலம்: வர்த்தக காஸ் சிலிண்டர் விலை நடப்பு மாதத்திற்கு ரூ.70.50 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ரூ.1,840.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை, எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக, காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தியதால், வரலாறு காணாத வகையில் ரூ.1,100க்கு மேல் விற்கப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டதாலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வந்ததாலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.200, மார்ச் மாதத்தில் ரூ.100 என அடுத்தடுத்து ரூ.300 வரை விலை குறைத்தனர். இதனால் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.818.50, சேலத்தில் ரூ.836.50 என குறைந்தது.

பிறகு ஏப்ரல், மே மாதங்களில் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் நிலையாக வைத்துக் கொண்டனர். அதுபோலவே, நடப்பு மாதமும் (ஜூன்) வீட்டு உபயோக சிலிண்டர் விலையில், எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இந்த புதிய விலை பட்டியலை, நேற்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது. அதில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடந்த மார்ச் 9ம் தேதி அறிவிக்கப்பட்ட விலையே நீடிப்பதாக தெரிவித்துள்ளது. அதேவேளையில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.70.50 குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் ரூ.1,911 ஆக இருந்த வர்த்தக சிலிண்டர் விலை ரூ.70.50 குறைக்கப்பட்டு ரூ.1,840.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்திருப்பதால், இவ்விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

The post வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.70.50 குறைப்பு: சென்னையில் ரூ.1,840.50 ஆக நிர்ணயம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Salem ,Dinakaran ,
× RELATED சிகிச்சைக்கு வராமல் வீட்டில் இருந்த 32 பேர் மீட்பு