×

நெல்லை காங். தலைவர் மரணத்தில் இலங்கை நபர்களுக்கு தொடர்பா?: சிபிசிஐடி போலீசார் விசாரணை

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணத்தில் இலங்கையை சேர்ந்த யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், கடந்த டிசம்பர் 2ம் தேதி மாயமான நிலையில் டிச.4ம் தேதி கரைச்சுத்துப்புதூரில் அவரது வீட்டிற்கு அருகேயுள்ள தோட்டத்தில் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் எழுதிய மரண வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியது. 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வந்த நிலையில், ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அலுவலகம் மற்றும் கள விசாரணை என இரு குழுக்களாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தொழில் அதிபர்கள், உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஜெயக்குமாரின் உறவினரான செல்வக்குமார் உள்பட 32 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் தூத்துக்குடியில் உள்ள ஜெயக்குமாரின் மனைவியின் சகோதரியான பள்ளி ஆசிரியை மல்லிகா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இதனிடையே நேற்று ஜெயக்குமாரின் சகோதரர்கள், அவர்களின் குடும்பத்தினரை நெல்லையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடந்துள்ளது. ஜெயக்குமாரின் உடலுடன் கடப்பா கல் கட்டப்பட்டு அதனை கடல் அல்லது கிணற்றில் வீச திட்டமிட்டிருந்தவர்கள் அது முடியாமல் போனதால் தான் தோட்டத்தில் போட்டு எரித்துள்ளனர் என்ற முடிவுக்கு சிபிசிஐடி போலீசார் வந்துள்ளனர். இவ்வாறு கடப்பா கல்லில் கட்டி உடலை வீசுவது இலங்கை நாட்டு பாணி என்பதால், ஜெயக்குமார் மர்ம மரணத்தில் திசையன்விளை பகுதியில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த நபர்கள் யாருக்கேனும் தொடர்பு இருக்கக் கூடும் என சிபிசிஐடி போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் ஜெயக்குமாருடன் தொடர்பில் இருந்த இலங்கையை பூர்வீகமாக கொண்ட நபர்கள் யாரேனும் உள்ளனரா? என்றும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதுதவிர ஜெயக்குமாரின் மகன்கள் மீதான பகையில் இச்சம்பவம் நடந்திருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

 

The post நெல்லை காங். தலைவர் மரணத்தில் இலங்கை நபர்களுக்கு தொடர்பா?: சிபிசிஐடி போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Nellie ,Kong ,CBCID ,Nellai ,Sri Lanka ,Nellai East District Congress ,President ,Jayakumar ,Nellai Congress ,Dinakaran ,
× RELATED நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் மர்ம...