×

சென்னையில் கதவு இல்லாத 448 பேருந்துகளில் தானியங்கிகதவுகள் பொருத்தம்: மாநகர போக்குவரத்துக்கழகம் தகவல்

சென்னை: சென்னையில் கதவுகள் இல்லாத 448 பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் 659 வழித்தடங்களில் நாள் ஒன்றுக்கு 3,436 பேருந்துகளை இயக்கி வருகிறது. இதில் தினமும் 35 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். நகரின் அனைத்து பகுதிகளை இணைக்கும் விதமாக சேவை இருப்பதால் மக்கள் அதிகம் பேருந்துகளிலேயே பயணிக்க விரும்புகின்றனர். மேலும் பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்த போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் காலை, மாலை நேரங்களில் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது மாணவர்கள் உள்ளிட்டோர் ஆபத்தான முறையில் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்கின்றனர். இதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்டோர் மூலம் எச்சரிக்கை செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்தால், அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என நடத்துநர்களுக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது. எனினும், படிக்கட்டு பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. எனவே, படிக்கட்டு பயணத்தை முழுமையாகத் தடுக்கும் வகையில் கதவுகள் இல்லா பேருந்துகளில் தானியங்கி கதவுகளைப் பொருத்த மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.

இதன் தொடர்ச்சியாக இதுவரை 448 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பயணிகளின் பாதுகாப்பு கருதி மாநகர போக்குவரத்துக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகர பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வருகின்றன. மொத்தம் 468 பேருந்துகளில் கதவுகள் இல்லை எனக் கண்டறியப்பட்டது. இதையடுத்து முதல்கட்டமாக 200 பேருந்துகளிலும், இரண்டாவது கட்டமாக 248 பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகளுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதுபோன்ற மேம்பாட்டுப் பணிகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post சென்னையில் கதவு இல்லாத 448 பேருந்துகளில் தானியங்கிகதவுகள் பொருத்தம்: மாநகர போக்குவரத்துக்கழகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Municipal Transport Corporation ,Metropolitan Transport Corporation ,Chennai Metropolitan Transport Corporation ,Dinakaran ,
× RELATED மூத்த குடிமக்கள் கட்டணமில்லா...