×

திருவள்ளூர் காக்களூர் சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு

சென்னை: திருவள்ளூர் காக்களூர் சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த காக்களூர் சிப்காட் தொழிற்சாலையில் 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்பேட்டை பகுதியில் தனியார் பெயின்ட் தொழிற்சாலை 25 வருடங்களாக இயங்கி வருகிறது. இதில் அம்பத்தூரை சேர்ந்த சுகந்தி(56) ஷோபனா(31), புஷ்கர்(40) கடம்பத்தூரை சேர்ந்த பார்த்தசாரதி(45) ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்த போது மின் கசிவால் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

இதனால் பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பிறகு பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்த தகவலின் பேரில் திருவள்ளூர், செவ்வாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த பயங்கர தீவிபத்தில் அவ்வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த மற்றொரு தொழிற்சாலையில் பணிபுரியும் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன்(37) என்பவர் மீது தொழிற்சாலையில் இருந்து சிதறிய பேரல் தீயோடு வந்து விழுந்ததில் காயம் அடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சீனிவாசன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மேலும் பெயின்ட் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஷோபனா என்ற பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மின்கசிவு காரணமாகவே இந்த தீவிபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. தீயணைப்பு வீரர்கள் கிட்டத்தட்ட 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தொழிற்சாலைக்குள் சென்று ஆய்வு செய்தபோது 2 பேர் உடல் கருகி எரிந்து கிடந்தனர். அது சுகந்தி, பார்த்தசாரதி ஆகியோரது உடல்கள் என அடையாளம் தெரிந்தது.

அந்த உடல்களை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர், மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவருவதால் தொழிற்சாலையை முறையாக பராமரிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து நடைபெற மீட்பு பணியில் இன்று மேலும் ஒருவரின் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்படுள்ளது. இந்த நிலையில் தீவிபத்து ஏற்பட்ட தொழிற்சாலையின் நிர்வாக உரிமையாளர் கணபதியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவள்ளூர் காக்களூர் சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Ciphkat factory ,Thiruvallur Gakhalur ,Chennai ,Ciphkot factory ,Kakhalur Chipcat factory ,Thiruvallur ,Ciphkot ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...