×

நாட்டரசன்கோட்டை ரயில் நிலையத்திற்கு கிடைக்குமா ‘கிரீன் சிக்னல்’: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் 25 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை பேரூராட்சி பகுதியில் 10,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நாட்டரசன்கோட்டையை சுற்றி திருவேலங்குடி, காளையார்மங்கலம், சூரக்குளம், புதுக்கோட்டை, ஆனைமாவளி, பீ.குளத்துப்பட்டி, கவுரிபட்டி, முத்தூர், கண்டுப்பட்டி, கண்டனிப்பட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இங்கே 2 மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் தொடக்கப்பள்ளிகள் உள்ளன இதில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் காரைக்குடி, சிவகங்கை, மதுரை, காளையார்கோவில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் பஸ் மற்றும் டூவீலரில் செல்கின்றனர். இங்குள்ள பிரசித்தி பெற்ற கண்ணுடையநாயகி அம்மன் கோயிலுக்கு தினசரி ஏராளமானோர் தரிசனம் செய்ய வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் நகரத்தார்களால் நடைபெறும் செவ்வாய் பொங்கல் உலக புகழ்பெற்றவையாகும்.

மேலும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் சமாதி, நகரத்தார்களின் செட்டிநாடு கட்டிடங்களை காணவும் ஏராளமானோர் வந்து செல்லும் நிலையில் இப்பகுதி மிக சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த ஊரில் 1937ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நாட்டரசன்கோட்டை ரயில் நிலையம் செயல்பட துவங்கியது. நீராவி என்ஜின் ரயில்கள் செல்லும் காலகட்டத்தில் இங்குள்ள பெரிய கிணற்றிலிருந்து நீராவி என்ஜினுக்கு நீர் நிரப்பப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு சம்பந்தப்பட்ட தளவாட பொருட்கள் குடோனும் இங்கு இருந்து உள்ளது.

மேலும் இங்கே ரயில்வே ஊழியர் தங்குவதற்கான குடியிருப்புகள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் தங்குவதற்கான வீடு இருந்துள்ளன. இந்த ரயில் நிலையத்தில் சென்னை உள்ளிட்ட அனைத்து விரைவு ரயில் மற்றும் பயணிகள் ரயில்களும் நின்று சென்றுள்ளது. பஸ் போக்குவரத்து இல்லாத காலகட்டங்களில் வணிக பெருமக்களான நகரத்தார்கள், கிராமமக்கள் இந்த ரயில் நிலையத்திலிருந்து பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 1999ம் ஆண்டு இந்த ரயில் நிலையம் மூடப்பட்டது.

பின்னர் அங்குள்ள குடியிருப்புகள் மற்றும் கிணறுகள் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த ரயில் நிலையத்தை மீண்டும் திறந்து ரயில்கள் நின்று செல்ல வழி செய்தால் இங்குள்ள பிரசித்தி பெற்ற கண்ணுடையநாயகி அம்மன் கோயில், சுற்றுலா தலங்களான கம்பர் சமாதி, செட்டிநாடு வீடுகள் வருவதற்கு எளிமையாக இருக்கும். மேலும் பள்ளி- கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் பொதுமக்கள் என அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.

எனவே மூடப்பட்ட ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கருப்பையா கூறுகையில், ‘இதுதொடர்பாக மதுரையில் ரயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். அதில் ரயில் நிலையத்திற்கான நடைமேடை, குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி, டிக்கெட் கொடுப்பதற்கு சிறிய கட்டிடம் என சுமார் ரூ.60 லட்சம் திட்ட
மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ரயில் நிலையம் அமைந்த பிறகு 10 பெட்டிகள் கொண்ட சாதாரண பயணிகள் ரயிலை முதலில் நிறுத்துவது. பின்னர் படிப்படியாக அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கான முயற்சி எடுப்போம். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இதுதொடர்பாக அனைவரையும் சந்திக்க உள்ளோம்’ என்றார். செல்லம் கூறுகையில், ‘இங்கிருந்து சிவகங்கை கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம், பள்ளி- கல்லூரிகளுக்கு ஏராளமானோர் செல்கின்றனர். பஸ் வசதிகள் குறைவான ஊராக உள்ளது. எனவே இந்த ரயில் நிலையம் அமைந்தால் சிவகங்கை, காரைக்குடி, மதுரைக்கு செல்வதற்கு எளிமையாக இருக்கும்’ என்றார்.

* தேவையை கருத்தில் கொண்டு திறக்கலாம்
ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கூறுகையில், ‘நான் பணிபுரியும் போது இந்த ரயில் நிலையத்தில் இருந்து தளவாட பொருட்கள் எடுத்து செல்வதற்கு என தனி ட்ராக் இருந்தது. மேலும் நீராவி இன்ஜின் காலகட்டத்தில் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி செல்லும் நீராவி என்ஜின் ரயிலுக்கு இங்கு தான் நீர் நிரப்பப்படும்.

அனைத்து ரயில்களும் மற்றும் விழா காலங்களில் மதுரை- காரைக்குடி என பல்வேறு ரயில்கள் இங்கு நின்று சென்றன. இந்த ரயில் நிலையம் மூடப்பட்டது மிகவும் துரதிஷ்டமானது. எனவே இப்பகுதி மக்களின் தேவையை கருத்தில் கொண்டு வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடாமல் இந்த ரயில் நிலையத்தை திறக்க வேண்டும்’ என்றார்.

* எந்த உதவியும் செய்ய தயார்
பேரூராட்சி தலைவர் கூறுகையில், ‘நெடுஞ்சாலையிலிருந்து இருந்து இந்த ஊரானது உட்பகுதியில் இருப்பதால் பஸ்கள் உள்ளே வந்து செல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இதனால் இந்த ரயில் நிலையம் அமைந்தால் இப்பகுதி மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் ரயில் நிலையம் அமைவதற்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பாக எந்த உதவியும் செய்ய தயாராக உள்ளோம்’ என்றார்.

The post நாட்டரசன்கோட்டை ரயில் நிலையத்திற்கு கிடைக்குமா ‘கிரீன் சிக்னல்’: பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Natarasankot ,Sivaganga ,Natarasankota ,Natarasankottai ,Thiruvelangudi ,Kalaiarmangalam ,Dinakaran ,
× RELATED வலுவில்லாத கூட்டணியால் தோல்வி: ஆலோசனை...